“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்கித் தருவதே திமுகவின் முதல் கொள்கை” – ஜெகத்ரட்சகன் எம்.பி

6 0

“புதுச்சேரியில் முதல்வர், எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் இல்லை. எங்கோ இருப்பவரை துணைநிலை ஆளுநராக அமர வைத்து அதிகாரத்தை தருகிறார்கள்” என ஜெகத்ரட்சகன் எம்.பி விமர்சனம் செய்துள்ளார். மேலும், “புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்தை வாங்கி தருவதுதான் திமுகவின் முதல் கொள்கை” என்று அவர் கூறினார்.

புதுச்சேரி மாநிலத்தில் தொகுதி வாரியாக திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.

திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார். அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி கூட்டத்தை திமுக கொள்கைபரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்பி தொடங்கி வைத்தார். தமிழக தொழில் துறை அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த பயிற்சி கூட்டத்தை தலைமையால் அனுப்பப்பட்ட நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியினர் காணொலி வாயிலாக பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி கூட்டத்தில் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளை சேர்ந்த தொகுதி செயலாளர்கள் மற்றும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் 800 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

இதில் ஜெகத்ரட்சகன் எம்.பி பேசியது: “புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் இப்போதிலிருந்தே உழைக்க வேண்டும். தமிழகத்தில் திமுக தலைவர் பொற்கால ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். உலகத்தில் இருக்கின்ற அத்தனை பேரும் இந்தியா வருகின்றனர். தொழில் தொடங்க தமிழகம் தான் வருகை தருகின்றனர்.

1954-க்கு முன்பு புதுச்சேரி ஒரு மாநிலம் அல்ல, நாடாக இருந்தது. அந்த நாடு தொடர்ந்திருந்தால் தமிழகத்தில் திராவிட நாடு, இங்கு புதுச்சேரியில் ஒரு நாடு என இருந்திருக்கும். இங்கு செம்மைப்படுத்த ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. இங்கு முதல்வர் நாற்காலி உடைந்துவிட்டால் கூட அதனை சரிசெய்ய டெல்லி செல்ல வேண்டும்.

மக்கள் தங்களை தாங்களே ஆண்டுகொள்ளும் ஆட்சி என்று சொல்கிறீர்களே, இது ஜனநாயகமா? புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. எங்கோ உள்ள கோவா மாநிலமாக இருக்கிறது. புதுச்சேரி சுற்றுலா தலமாக இருக்கிறது. இங்குள்ள விமான நிலையத்தை பெரிதாக்கலாம்.

3 பஞ்சாலைகளை திறக்க வாய்ப்பில்லை. இதற்கெல்லாம் மாநில அந்தஸ்து பெற வேண்டும். அதனை பெறுவது திமுக ஆட்சியால் தான் முடியும். நான்கரை ஆண்டு காலமாக தமிழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தவொரு நிதியும் கிடைக்கவில்லை. ஆனாலும் திமுக தலைவர் நீதிமன்றத்தை நாடினார்.