எமது காலத்தில் மேற்கொண்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

35 0

மலையகத்தில் இருக்கும் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மை குறை கூறிக்கொண்டிருக்காமல், நாங்கள் எமது காலத்தில் மலையகத்தில் மேற்கொண்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்   போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும்  உரையாற்றுகையில்,

மலையக மக்களின் வீடுகள்தொடர்பான விடயங்களை வேறு ஒரு அமைச்சுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இல்லாமல் வீடமைப்பு தொடர்பில் தேசிய கொள்கை ஒன்றை அமைத்து, அதனை ஒரு அமைச்சுக்கு கீழ் கொண்டுவந்து, நாட்டின் அனைத்து  பகுதிகளுக்குமான வீடமைப்பு  நடவடிக்கைகளை ஒரு அமைச்சுக்கு கீழ் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எமது அரசாங்கத்தில் மலையக மக்களின் வீடமைப்பு பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நாங்கள் கலந்துரையாடி, 14ஆயிரம் வீடுகளை அமைக்க தேவையான உதவிகளை பெற்றுத்தருவதான உத்தரவாதத்தை பெற்றுக்கொண்டோம். ஒரு வீட்டுக்கு  28 இலட்சம் ரூபா வழங்குவதாக தெரிவித்திருக்கிறது. அதனால் இந்த பணத்தை பெற்றுக்கொண்டு, பொறுப்புடன் செயற்படவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

அத்துடன் வீட்டுத்திட்டங்களை மேற்கொள்ளும்போது பிரதான வீதிக்கு அருக்கில் அமைப்பதை காெள்கையாக கொள்ள வேண்டும். ஏனெனில் அவிசாவளை புவக்பிட்டி பென்டிக் தோட்டத்துக்கு மேலால் கருங்காலி என்ற ஒரு பிரிவு காணப்படுகிறது. அண்மையில் அங்கு ஏற்பட்ட தீ அனர்த்தம் ஏற்பட்டபோது நான் அங்கு சென்றேன். வெள்ளவத்தையில் இருந்து எனது ப்ராடோ வாகனத்தில் பென்டிக் தோட்டத்துக்கு ஒரு மணித்தியாலயத்துக்கும் குறைவான  நேரத்தில் சென்றேன்.  ஆனால் பென்டிக் தோட்டத்தில் இருந்து குறித்த இடத்துக்கு செல்ல எனக்கு இரண்டு மணி நேரம் சென்றது.

அதாவது, அந்த மக்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர் தபால் காரர் யாரும் அந்த பிரதேசத்துக்கு செல்வதில்லை, அவர்களுக்கு செல்ல முடியாது. அதனால் அந்த மக்களை கீழ் பகுதிக்கு கொண்டுவந்து, பிரதான வீதிக்கருகில் வீடுகள் நிர்மாணித்து கொடுக்க வேண்டும். மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பது மாத்திரமல்ல, அந்த மக்களை தேசிய நீராேட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும்.

மலையக மக்களுக்கு  இரண்டு இலட்சம் வீடுகள் தேவைப்படுகின்றன. அந்த மக்கள் இந்த  நாட்டுக்காக 200 வருடங்கள் உழைத்தவர்கள். அதனால் அந்த மக்களுக்கு தேவையான வீட்டு வசதிகளை செய்துகொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். மாறாக அந்த மக்களுக்கு அனுபாதப்பட்டு செய்த்தேவையில்லை. கடந்த மார்ச் மாதம் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான அமைச்சின் மாவட்ட குழு கூட்டம் இடம்பெற்றபோது, அமைச்சர் சமன்த வித்தியாரத்னவிடம், எத்தனை வீடுகளை கட்டப்போகிறீர்கள் என கேட்டபோது, ரணில் விக்ரமசிங்க அமைத்த 1300 வீடுகள் கட்டி முடியாமல் இருக்கிறது. மொத்தமாக 6ஆயிரம் வீடுகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் கட்டி முடிப்பதாக தெரிவித்தார்.

ஆனால் டிசம்பர் 31க்கு முன்னர் 6ஆயிரம் வீீடுகளை கட்டி முடிக்க முடியாது. ஆனால் இதனை வைத்து, நாங்கள் அரசியல் செய்ய முயற்சிக்கவில்லை. அமைச்சர் முயற்சித்திருப்பார். என்றாலும் அது சாத்தியமாகவில்லை. என்றாலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதி மீறப்பட்டிருக்கிறது. அதனால் அரசாங்கத்தில் இருக்கும் மலையக பிரதிநிதிகள் எங்களை குறை கூறிக்கொண்டிருக்காமல், மலையக மக்களுக்கு நாங்கள் எமது காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருக்கிறோம். அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்றார்.