பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் கடந்த வாரம் பாராளுமன்றத்துக்கு வருகைத் தந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் பிரதி அமைச்சரின் வார்த்தை பிரயோகத்தால் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு, அசௌகரியத்துக்கு உள்ளானார். இந்த விடயம் குறித்து உரிய கவனம் செலுத்துமாறு பிரதமரிடம் வலியுறுத்துகிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்ராணி கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற அமர்வின் போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆண் – பெண் சமத்துவம் மற்றும் சித்திரவதை ஒழிப்பினை முன்னிலைப்படுத்திய 16 நாள் செயற்திட்டம் குறித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஐக்கிய நாடுகள் சபையின் ஆண் – பெண் சமத்துவம் மற்றும் சித்திரவதை ஒழிப்பினை முன்னிலைப்படுத்திய 16 நாள் செயற்திட்டம் நவம்பர் 25 ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
20 சதவீதமான பெண்கள் உடலியல், உளவியல் மற்றும் வார்த்தை ரீதியிலான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு முகங்கொடுக்கிறார்கள். பாராளுமன்றத்திலும், வெளியிடங்களிலும் இவ்வாறான நிலைமை காண முடிகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் கடந்த வாரம் பாராளுமன்றத்துக்கு வருகைத் தந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் பிரதி அமைச்சரின் வார்த்தை பிரயோகத்தால் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு, அசௌகரியத்துக்கு உள்ளானார். இந்த விடயம் குறித்து உரிய கவனம் செலுத்துமாறு பிரதமரிடம் வலியுறுத்துகிறேன்.
சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிடும் அரசாங்கம் முதலில் அடிப்படை விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பெண் ஊடகவியலாளர் குறித்த பிரதி அமைச்சரின் வார்த்தை பிரயோகத்தால் நெருக்கடிக்குள்ளான சந்தர்ப்பத்தில் நானும் அவ்விடத்தில் இருந்தேன். அவருக்காக முன்னிலையாகியிருந்தேன் என்றார்.

