ஜொகூர் ஹோட்டலில் தங்குவோருக்கு விரைவில் கூடுதல் கட்டணம்

18 0

மலேசியாவின் ஜொகூர் பாருவில் ஹோட்டல்களில் தங்குவோருக்கு அடுத்த ஆண்டு (2026) ஜனவரி முதல் தேதியிலிருந்து புதிதாகப் பயணக் கட்டணம் விதிக்கப்படவுள்ளது.

பயணக் கட்டணம் 3 ரிங்கிட் (சுமார் 95 காசு).பொது வசதிகள், சுற்றுலாக் கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு அந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்று Free Malaysia Today ஊடகம் தெரிவித்தது.

உரிமம் பெறாத ஹோட்டல்களை மூடவும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் புதிய கட்டணம் வழிவகுக்கும் என்று ஜொகூர் மாநில நிர்வாக மன்ற உறுப்பினர் சொன்னார்.

வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஜொகூர் சுற்றுலாத்துறையின் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் அது உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே மலாக்கா, பாஹாங், பேராக் உள்ளிட்ட மலேசியாவின் மற்ற மாநிலங்கள் சுற்றுப்பயணிகளுக்கு அத்தகைய கூடுதல் கட்டணம் விதிக்கின்றன.