கேகாலை, பஹல கடுகண்ணாவை பகுதியில் சனிக்கிழமை (22) ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக சீரமைப்பு பணிகளில் பெரகலை இராணுவ முாமிலுள்ள இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவை பகுதியின் கணேதென்ன பகுதியில் உள்ள ஒரு பகுதியை அடுத்த 24 மணி நேரத்திற்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, வாகன சாரதிகளை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேகாலை மாவட்ட செயலாளர் ஜகத் எம். ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பிலிருந்து குருநாகல் வழியாக கண்டிக்கும், கொழும்பிலிருந்து கரண்டுபன வழியாக கண்டிக்கும், கொழும்பிலிருந்து மாவனெல்ல, ஹெம்மாதகம, ரம்பல வழியாக கண்டிக்கும், கொழும்பிலிருந்து மாவனெல்ல, கணேவத்த சந்தி வழியாக கோவில்கந்த வழியாக கண்டிக்கும் மாற்று வழிகளைப் பயன்படுத்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
கண்டி மற்றும் கடுகண்ணாவை பகுதிகளில் நாளை திங்கட்கிழமை (24) க.பொ.த. உயர்தரப் பரீட்சையை எதிர்கொள்ளும் பரீட்சார்த்திகளுக்கு மாவனெல்ல மற்றும் கடுகண்ணாவ டிப்போக்கள் வழியாக பாதுகாப்பான போக்குவரத்தை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மாவட்டச் செயலாளர் பொதுமக்களை அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளதாகவும், அதிகாரிகள் யாரையும் உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டார்கள் எனவும், வீதியை சுற்றி வளைத்து பொலிஸார் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

