போர்க்காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் செயற்பாடுகளுக்கும் நீதி பெறுக் கொடுக்கப்பட வேண்டும். ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டால் தான் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமென தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கடந்த போர்க்காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் படுகொலைசெய்யப்பட்டமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடகநிறுவனங்கள் மீதான தாக்குதல் செயற்பாடுகளுக்கும் நீதி பெறுக் கொடுக்கப்படவேண்டும்.
முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைகளை கஸ்ட மருத்துவமனைகள் பட்டியலில் இருந்து நீக்குவதுடன்,நாட்டின் ஏனையபாகங்களைப்போன்று வன்னிப் பிராந்தியத்திற்கும் சமத்துவ அடிப்படையிலும்இ சமச்சீரான முறையிலும் சுகாதார வளப் பங்கீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேவேளை வடக்கு மாகாணத்தில் கடந்த 2019ஆம்ஆண்டு முறையாக நேர்முகத்தேர்வில் பங்குபற்றி நியமனம் வழங்கப்பட்டு பின்னர் இரத்துச்செய்யப்பட்ட சுகாதார உழியர்கள் 454பேரையும் எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் மீளஆட்சேர்ப்புச்செய்ய வேண்டும்.
இந்த பேரவையிலே கடந்த ஓராண்டுகாலமாக சுகாதாரத்துறையின் சமச்சீரற்ற வளப்பரம்பல் தொடர்பில் பலமுறை விவாதித்திருக்கிறேன். 2026ஆம் ஆண்டில் எங்கள் முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைகளை கஸ்ட மருத்துவமனைகள் பட்டியலில் இருந்து நீக்கிவிடுங்கள் என்ற கோரிக்கையை இன்றும் எனது முதல் கோரிக்கையாக இந்தப் பேரவையிலே முன்வைக்கிறேன்.
நாங்கள் அதிகமாக கேட்கவில்லை. ஏனைய மாவட்டங்களை விடவும் கூடுதலான வசதிகளை தாருங்கள் என்று கேட்கவில்லை. இந்தத்தீவிலே ஏனைய அனைத்து மாவட்ட பொது மருத்துவமனைகளுக்குமான வசதிகளை எங்கள் மாவட்ட பொது மருத்துவ மனைகளுக்கும் கிடைக்கச் செய்யுங்கள் என்றே கேட்கின்றோம்.
பௌதிக வளப்பற்றாக்குறை, மனித வளப்பற்றாக்குறைஇ நலிவுற்ற போக்குவரத்து வசதி, சம்பளமற்ற விடுகை மற்றும் இணைப்பு மூலமான செயலற்ற ஆளணி மிகுதல் என்பன வன்னிமாவட்டத்தின் சுகாதாரத்துறையின் தரமான சேவை வழங்கலுக்கு சவாலாகின்றன, முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதார சேவை வழங்கலில் உள்ள நோயாளர் காவு வண்டிகள் 22 இல் 18 வண்டிகளும் 12 இருவரிசை இருக்கைகொண்ட ஊர்திகளில் 5 ஊர்திகளும் 10 ஆண்டுகளுக்கும் மேலான நீடித்த உழைப்பைக் கொண்டன.
இதனால் வாகனங்களுக்கான வருடாந்த திருத்தச் செலவு உயர்வதோடு அடிக்கடி திருத்தத்தேவைகளுக்கு உள்ளாகுவதால் உடனடி நோயாளர் பரிமாற்றங்களும் முல்லைத்தீவில் கேள்விக்கு உள்ளாகிறது. முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவை வழங்கலின் தரமேம்பாட்டுக்கு புதிய நோயாளர் காவு வண்டிகள் இரண்டேனும் 2026 இல் வழங்க முயற்சி செய்யுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
மனிதவளப்பற்றாக்குறை பல தளத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மருத்துவ சேவை வழங்கலைப் பாதிக்கிறது. உயர்மட்ட மருத்துவ நிபுணர்கள் தொடக்கம் சிற்றூழியர் வரையான ஆளணிப்பரம்பலில் நிலவும் பற்றாக்குறை தரமான சுகாதார சேவை வழங்கலுக்கு முல்லைத்தீவில் தடையாகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நிரந்தர மருத்துவ நிபுணர் ஆளணி 23. தற்போது இருப்பது 1. முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்காலிக அடிப்படையிலான மருத்துவ நிபுணர்கள் பதினெண்மர் பணியாற்றுகின்ற போதும் ஒருவர் மட்டுமே நிரந்தர மருத்துவ நிபுணராக முல்லைத்தீவில் பணியாற்றுகின்றார்.2026இல் எங்கள் மாவட்டத்துக்கு நிரந்தர மருத்துவ நிபுணர்களை வழங்குங்கள்.
நிரந்தர மருத்துவ நிபுணர்கள் முக்கிய நான்கு துறைகளுக்கும் கிடைக்கும் போது ஏனைய அனைத்து மாவட்ட பொது மருத்துவமனைகளிலும் உள்ள பயிற்சி மருத்துவர்களை முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைகளும் பெறமுடியும்.
மேலும் துணைமருத்துவப் பணியாளர்களான மருந்தாளர், மருத்துவ ஆய்வுகூட தொழினுட்பர், இயன்மருத்துவர், கதிர்ப்பட பதிவாளர்,மருந்துக்கலவையாளர் ஆகியோருக்கான வெற்றிடங்களும் முல்லைத்தீவில் உடன் நிரப்பவேண்டிய தேவைக்குரியன.
வடமாகாணத்தில் உள்ள சுகாதாரப்பணி உதவியாளர்களின் வெற்றிடம் தற்பொழுது 650 மேல் காணப்படுகிறது. இதனால் அடிப்படைச் சுகாதார சேவை வழங்கலில் ஒவ்வொரு மருத்துவ நிறுவனமும் மிகுந்த நெருக்கீட்டை எதிர்கொள்கின்றது.
2019 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் முறைப்படியான நேர்முகத்தேர்வின் பின்னர் நியமனம் வழங்கப்பட்டு பின்னர் இரத்துச்செய்யப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் மீள் நியமனத்துக்கான வேண்டுகைகள் அரசுக்கு விடுக்கப்பட்டன. ஆனால் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. ஆகவே இந்த விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

