தெதுரு ஓயா மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய கரைகளை அண்யுள்ள தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெதுரு ஓயா படுகையின் மேல் மற்றும் நடுத்தர பகுதிகளில் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையினால் தெதுரு ஓயாவின் நீர்மட்டம் நிரம்பி வழியும் நிலையில் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக வினாடிக்கு மொத்தம் 19.400 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும், தற்போது நீர்த்தேக்கத்தால் பெறப்படும் நீர் கொள்ளளவைப் பொறுத்து எதிர்காலத்தில் இந்த அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தெதுரு ஓயா படுகையிலுள்ள வாரியபொல, நிக்கவரெட்டிய, மஹாவ, கோபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிகட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை 6.00 மணி நிலவரப்படி, அத்தனகலு ஓயா படுகையின் பெரும்பாலான நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான அளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தனகலு ஓயாவில் உள்ள நீர்நிலை நிலையங்களின் தற்போதைய மழைப்பொழிவு மற்றும் ஆற்று நீர் மட்டங்களை பகுப்பாய்வு செய்த திணைக்களம், திவுலப்பிட்டி, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவங்கொடை, ஜா-எல, கந்தான மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் சில தாழ்வான பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
இந்த நிலைமை காரணமாக, சில இடங்களில் இந்த தாழ்வான பகுதிகள் வழியாக செல்லும் சில வீதிகள் வெள்ள நீரில் மூழ்கும் வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகள் வழியாக பயணிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன சாரதிகள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

