ரணில் – சஜித் இணைவதற்காக பலிக்கடாவாகத்தயார் ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு

19 0

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் இந்த பயணத்தை வெற்றிகரமாகத் தொடர முடியாது என்பது நுகேகொடை கூட்டத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியபாடமாகும். ரணில் – சஜித் இணைவதற்கு நான் தடையாக இருக்கின்றேன் என்று எவரேனும் கருதினா ல் அதற்காக பலி கடா ஆவதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில்  சனிக்கிழமை  (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்துக்கு எதிரான நுகேகொடை எதிர்ப்பு பேரணி மிக வெற்றிகரமாக இடம்பெற்றது. அதன் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஐக்கிய தேசிய கட்சி என்பது தெற்கு அரசியல் முகாம் ஆகும். அரசாங்கத்துக்கு எதிராக அமைக்கப்படும் எந்தவொரு சக்தியுடனும் இணைவதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் நாம் தயாராக இருக்கின்றோம்.

கட்சி தலைமைத்துவத்தினால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துடனும் இணக்கத்துடன் செயற்பட நான் தயாராக இருக்கின்றேன். எனது அரசியல் வாழ்வில் என்றும் இல்லாதவாறு நுகேகொடை பேரணியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. எனினும் அவற்றுக்கு மத்தியிலும் நாம் வெற்றிகரமாக அதை நிறைவு செய்துள்ளோம்.

நாமல் ராஜபக்ஷவின் உரை நிறைவடைந்து இரண்டு நிமிடங்களுக்குள் சுமார் ஒரு மணித்தியாலம் நுகேகொடை முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உயர்தர பரீட்சை தொடர்பில் மிகுந்த அவதானத்துடனேயே கூட்டம் நடத்தப்பட்டது. மாலை 5 மணிவரை ஒரு பட்டாசு கூட வெடிக்கப்படவில்லை.

நுகேகொடை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாத்திரமின்றி ஐக்கிய மக்கள் சக்தியின் சுஜீவ சேனசிங்க, ஹர்ஷண ராஜகருணா உள்ளிட்டோரும் எமக்கு பல்வேறு வழிகளில் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தனர். அடுத்தடுத்த கூட்டங்களில் அவர்கள் நிச்சயம் கலந்து கொள்வர் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.

வரும் நாட்களிலும் இவ்வாறான பல கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 1000 சிறிய மக்கள் சந்திப்புக்களை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் இந்த பயணத்தை வெற்றிகரமாகத் தொடர முடியாது.

என்பது நுகேகொடை கூட்டத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும். தெற்கு முகாம் என்ற என்ற ரீதியில் ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

இப்போதாவது நாம் அதனை செய்யாவிட்டால், இந்த இணைவு மேலும் தாமதப்படுத்தப்பட்டால் இந்த தெற்கு முகாமும் வெ வ்வேறு திசைகளில் சிதைவடையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. சவால்களை எதிர்கொள்ளக் கூடிய குழுக்களுடன் இணைவதற்கு மக்கள் கட்சி பேதம் பார்ப்பதில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி சற்று ஆழமாக இந்த விடயத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியவுடன் இது குறித்து அவருடன் கலந்தாலோசிக்கவுள்ளோம். அரசாங்கத்துக்கு எதிராக எழுவதற்கு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே எதிர்க்கட்சிகளின் பொறுப்பாகும். அந்த பொறுப்பை நாம் நிறைவேற்றியிருக்கின்றோம். எனவே ஐக்கிய மக்கள் சக்தி தீர்க்கமானதொரு முடிவை எடுப்பதற்கு தாமதிக்கும் பட்சத்தில் 2024 தேர்தல் முடிவுகளைப் போன்று மீண்டுமொரு தோல்வியை சந்திக்க நேரிடும்.

ரணில் – சஜித் இணைவதற்கு நான் தடையாக இருக்கின்றேன் என்று எவரேனும் கருதினால் ஓய்வு பெறவும் நான் தயாராக இருக்கின்றேன். இவ்விரு தரப்பின் இணைவிற்காக பலி கடா ஆவதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அரசியலில் பதவிகளை விட ஐ.தே.க. மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.