உலகளாவிய பாதுகாப்புச் சூழல் ஒரு சவாலான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் வேகமாக வளர்ந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு அழுத்தங்களை எதிர்கொள்கிறது. எனவே கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் தேவை முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்தார். இந்து சமுத்திரத்தில் மூலோபாய நிலைப்பாடு கொண்ட நாடாக இலங்கை இருப்பதால், அதனை ஒத்துழைப்பு கடல்சார் கண்காணிப்புக்கும், பாதுகாப்புக்கும் மிகவும் இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
கூட்டத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக, இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நடத்திய இருதரப்பு கலந்துரையாடல் ஆகும். இரு நாடுகளும் பரஸ்பர நலன் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தின.
கொழும்பு பாதுகாப்பு மாநாடு கூட்டம், இலங்கை – இந்திய பாதுகாப்புப் பங்காளித்துவத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டத்தில் வந்துள்ள நிலையில், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இந்த மாநாட்டில் ஆற்றிய உரை, பிராந்தியத்தின் மாறிவரும் பாதுகாப்புச் சூழலைக் கூர்மையாக எடுத்துக்காட்டியது.
உலகளாவிய பாதுகாப்புச் சூழல் ஒரு சவாலான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் வேகமாக வளர்ந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு அழுத்தங்களை எதிர்கொள்வதால், கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் தேவை முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்று கூறினார்.
இந்தியப் பெருங்கடலை ‘நமது மிகப்பெரிய பகிரப்பட்ட பாரம்பரியம்’ என்று வலியுறுத்திய தோவால், பிராந்திய கடற்பரப்பை பாதுகாப்பதற்காக உறுப்பு நாடுகள் கூட்டாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டவிரோத கடத்தல், கடற்கொள்ளை மற்றும் பிராந்திய வல்லரசுப் போட்டி ஆகியவை மீண்டும் எழுந்துள்ள நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய, திறந்த, விதிகளின் அடிப்படையிலான கடல்சார் ஒழுங்கின் அவசியத்தையும் இதன் போது அவர் வலியுறுத்தினார். இது இலங்கையின் நிலைப்பாட்டிற்கும், அதன் புவிசார் அரசியல் முக்கியத்துவத்திற்கும் வலு சேர்க்கிறது.
இந்த மாநாட்டில், ஆழ்கடல் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்தல், மற்றும் பேரிடர் நிவாரணத்தில் கூட்டுச் செயல்பாடு ஆகிய முக்கியத் தூண்களின் கீழ் ஒத்துழைப்பை மேம்படுத்த உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்த ஐந்து தூண்களிலும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மூலம் கூட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

