வளரும் காலத்தில் தாயையும் இழந்து பின்னர் வளர்த்த பாட்டியையும் இழந்து தற்போது தனித்திருக்கும் பல ஆண்டுகாலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு அரசாங்கத்தின் வரவு , செலவுத்திட்டம் என்ன ஆற்றுப்படுத்தலை வழங்கப்போகிறதென தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இத் தீவிலே ஆயுதங்களை விரும்பி ஏற்ற இனமல்ல எங்கள் இனம். அரசியல் வழியில் போராடித்தோற்று ஆயுதங்களை ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். 2009 உடன் ஆயுதமும் மௌனிக்கப்பட்டது.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே மாறிவரும் அரசுகள் முயல்வதாக அறிக்கைகள் காட்டுகின்றன. செய்திகளில் அரசுகளின் சார்பாளர்களாக நீங்கள் மாறி மாறி எங்களை ஏமாற்றுகிறீர்கள்.
எங்கள் அயல் வீட்டுப் பிள்ளை – தம்பி ஆனந்தசுதாகரின் மகன் மற்றும் மகளைப் போல பிறந்தது முதல் இறக்கும் வரை பிள்ளைகளும், சகோதரர்களும்,மனைவிகளும், கணவர்மாரும், தந்தையரும் தாய்மாரும், பாட்டன், பாட்டி மாருமாக ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும் இன்னமும் வடுக்களோடு தான் நகர்கிறோம்.
எங்களுக்கு ஆரோக்கியமான சமூக வாழ்வுக்கான கதவை உங்கள் அரசு எப்போது திறக்கப்போகிறது. இந்தத்தீவின் நல்லிணக்கத்துக்கான முதற்படியே – எங்களுக்காக குரல்கொடுத்து இப்போதும் சிறையில் வாடும் எங்களின் உறவுகளின் விடுதலைதான்.
தயவுசெய்து எங்கள் உறவுகளை விடுவித்து நல்லிணக்கச் சைகையை காட்டுங்கள். உங்கள் வரவு ,செலவுத்திட்டம் முன்மொழியும் ஆரோக்கிய வாழ்வுக்கான வழியை ஈழத்தமிழர்களுக்கும் திறந்து விடுங்கள் என்றார்.

