திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் போராட்டம் ஓயப்போவதில்லை. தொடர்ந்தும் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என முத்து நகர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மழையையும் பாராமல் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தங்களது 351 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின்சக்தி உற்பத்திக்காக காணிகளை அபகரித்ததையிட்டே இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது அங்குள்ள விவசாய குளங்களையும் மூடி, குறித்த திட்டத்தை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணி என கூறி அடாத்தாக விவசாயிகளை வெளியேற்றி இதனை செய்து வருகின்றனர்.
800 ஏக்கர் அளவில் காணி சுவீகரிப்பு செய்யப்பட்ட நிலையில் குறித்த விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வீதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அபகரிக்கப்பட்ட காணியை மீளத் தருமாறும் அல்லது மாற்றீடாக காணிகளை விவசாய செய்கைக்காக வழங்குமாறும் கோரி பல போராட்டங்களை ஜனாதிபதி செயலகம் தொடக்கம் பிரதமர் செயலகம் வரை முன்னெடுத்த போதிலும் தீர்வு வழங்கப்படாமை குறத்து மன வேதனை அடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.
1972ஆம் ஆண்டு முதல் தங்களது ஜீவனோபாயமாக விவசாய செய்கையை முன்னெடுத்து வந்த முத்து நகர் விவசாயிகள், வீதியில் வெயில் மழையிலும் போராடி வருவது, மக்களை கஷ்டத்துக்குள் தள்ளும் ஆட்சியாக இது விளங்குகிறது என்பதை உணர்த்துகிறது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருகோணமலை ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறுபான்மை மக்களுக்கான தீர்வில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
எனவே முத்து நகர் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை சத்தியாக்கிரகப் போராட்டம் தொடரும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

