முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியை எதிர்த்து நடைபவனி

23 0

முல்லைத்தீவு கடற்கரையில் சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (21) “சர்வதேச மீன்பிடியை ஒழித்து எமது உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது.

சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட கரையோர இளைஞர்கள் இணைந்து காலை இந்த நடைபவனியில், கடல்சார் வளங்களை பாதுகாக்கவும், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

சட்டவிரோத மீன்பிடியை இந்நாட்டு அரசாங்கம் முற்றுமுழுதாக தடை செய்யவேண்டும் என வலியுறுத்தி நடைபவனியில் பங்கேற்ற இளைஞர்கள் முல்லைத்தீவின் இளம் மீனவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலம் வேண்டும், முல்லைத்தீவு கடற்கரையை காக்க சட்டவிரோத மீன்பிடியை நிறுத்தவும், கடலை பாதுகாப்போம் சட்டவிரோதத்தை தடுப்போம், எங்கள் பாரம்பரிய கடலில் உங்கள் சட்டவிரோத படகுகள் வேண்டாம் போன்ற பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு நடைபவனியில் கலந்துகொண்டிருந்தனர்.

நடைபவனியின் நிறைவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், தயாரிக்கப்பட்ட மகஜர் ஊடகங்களுக்கு வாசித்து விளக்கப்பட்டதுடன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கான மகஜரினை மாவட்ட செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரிடம் அதிகாரபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நடைபவனியின் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் இணை இணைப்பாளர்களான மதுசனா, சயந்தன் மற்றும் உத்தியோகத்தர்கள் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சி.பிரதாஷ் மற்றும்  இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.