மொழியின் மூலம் சரியான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாமையாலேயே இனவாத, மதவாத ரீதியான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழி தொடர்பான பயிற்சிச் செயலமர்வொன்று கடந்த 18ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதன்போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சேவைகள் அலுவலகம் ஏற்பாடு செய்த இந்த செயலமர்வில், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
செயலமர்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய சபாநாயகர், ஒரு மொழியில் சரியான முறையில் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலேயே இனவாதம், மதவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
அனைத்து இனங்களையும் மதிக்கும் ஒரு சிறந்த இலங்கையர் என்ற சமூகத்தை உருவாக்குவதற்கு, பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுடன் சிறந்த தொடர்புகளை ஏற்படுத்தி சமூகங்களை வழிநடத்துவதற்கு மொழிகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, மொழி என்பது தொடர்பாடலை ஏற்படுத்தும் கருவி மாத்திரமன்றி அது குறித்த மொழியைப் பேசும் சமூகத்திற்குக் கொடுக்கும் கௌரவமாகும்.
எந்தவொரு நபரும் அவர் பேசும் மொழியின் காரணமாக எந்த வகையிலும் வித்தியாசமாக நடத்தப்படக்கூடாது. நாட்டின் மிக உயர்ந்த நிறுவனம் இந்த வழியில் மூன்று மொழிகளில் பணியாற்றுவதனால் காண்பிக்கப்படும் முன்மாதிரி அரச கரும மொழிகளைக் கடைப்பிடிப்பதில் பொதுமக்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது என்றார்.
இதற்கமைய, சிங்கள மொழி பாடநெறியைத் தொடர்வதற்கு 21 பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மொழிப் பாடநெறியைத் தொடர்வதற்கு 63 பாராளுமன்ற உறுப்பினர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிகழ்வில் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, அரச கரும மொழிகள் ஆணையாளர் நாயகம் நந்தன ஹெட்டியாராச்சி மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் சேவைகள் அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) கே.பி. சந்தன மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.








