சென்னையில் எஸ்ஐஆர் பணியில் அரசியல் கட்சிகள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் (பிஎல்ஏ), வாக்காளர்களுக்கு தவறாக வழிகாட்டி குழப்பத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக வாக்காளர் பட்டியலில் 6.41 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் கடந்த 20 ஆண்டுகளாக உயிரிழந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது.
இது கள்ள ஓட்டுக்கு வழிவகுப்பதாக பல்வேறு புகார்கள் தேர்தல் ஆணையத்துக்கு சென்றன. இதைத் தொடர்ந்து, முதலில் சோதனை அடிப்படையில் பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் கடந்த நவ.4 முதல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்றுவருகிறது.
இந்த பணிகளை மேற்கொள்ள அரசு அலுவலர்கள் 68,464 பேர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (பிஎல்ஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தபட்சம் 3 முறை சென்று, படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்த படிவங்களை பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அவர்களுக்கானஊதியத்தையும் ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தியுள்ளது.
2.37 லட்சம் முகவர்கள்: பிஎல்ஓ.களுக்கு உதவி செய்ய, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் (பிஎல்ஏ) 2.37 லட்சம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பூர்த்தி செய்த படிவங்களை நாளொன்றுக்கு 50 எண்ணிக்கையில் பெற்று, ‘படிவங்களை நான் முறையாக சரிபார்த்தேன். தவறு இருந்தால் தண்டனைக்கு உள்ளாவேன் என்பதை அறிவேன்’ என்ற உறுதிமொழியுடன் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாகபடிவங்களை சமர்ப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் ஒன்றாக இருந்தால் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கே அலுவலர்கள் (பிஎல்ஓகள்) செல்வதில்லை என்றும், படிவங்களை வழங்குவதில்லைஎன்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறப்பு முகாம்கள்: சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தற்போது சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
அங்கு சந்தேகங்களை கேட்க வரும் வாக்காளர்களை, அரசியல் கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள் (பிஎல்ஏக்கள் தவறாக வழிநடத்து வதாகவும், கணினி மையங்கள் மற்றும் இ-சேவை வழங்கிவரும் தனியார் மையங்களுக்கு ஆதார் அட்டையுடன் சென்றால், அவர்களே எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்து, எஸ்ஐஆர் படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பித்துவிடுவார்கள் என்றும் கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், அதன்படி, இ-சேவை, கணினி மையங்களுக்கு சென்றால், ஆதார், வாக்காளர் அட்டையில் இருக்கும் பெயர்கள் பொருந்தாத சூழலில், படிவங்களை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் வாக்காளர்கள் அவதிப்பட்டு வருவதாகவும், இதை மாவட்ட தேர்தல் அதிகாரி முறைப்படுத்தவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

