பாமக சார்பில், திமுக ஆட்சியின் தொழில் முதலீடுகள் குறித்த உண்மை நிலை என்ன என்பதை விளக்கும் வகையில் ஆவண புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சி எழும்பூரில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பாமக தலைவர் அன்புமணி தலைமை தாங்கி, ‘திமுக அரசின் பொய் தொழில் முதலீடுகள்’ என்ற ஆவண புத்தகத்தை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அன்புமணி பேசியதாவது: தமிழகத்தில் ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள் நடந்திருக்கிறது என்றும், அதன்மூலம் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோர் தொடர்ந்து ஒரு பொய்யைச் சொல்லி வருகிறார்கள்.
அது பொய் என்று இந்த ஆவணம் மூலம் நிரூபித்திருக்கிறோம். குறிப்பாக, 2025 செப்டம்பர் மாதம் வரை ரூ.11,32,575 கோடியில் 1,059 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், இதன்மூலம், 34,02,998 வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அரசு தரப்பில் கூறப்படுள்ளது. அதாவது, 2021-22-ம் ஆண்டில் ரூ.68,405 கோடி மதிப்பீட்டில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
அவற்றில் ரூ.10,000 கோடி மட்டுமே முதலீடுகள்வந்திருப்பதாக உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல், 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1.67 லட்சம் கோடியில் 86 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், ரூ.7 ஆயிரம் கோடிக்கும் குறைவாகவே முதலீடுகள் வந்துள்ளன.
2024 ஜனவரியில் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6,64,180 கோடி மதிப்பீட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆனால், இதில் 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதுவரை முதலீடு செய்யவில்லை.
மேலும், 2024-25-ம் ஆண்டில் ரூ.39,549 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, இதுவரை ஒன்றுகூட செயல்பாட்டுக்கு வரவில்லை. 2025 ஏப்ரல் முதல் தற்போதுவரை ரூ.1.18 லட்சம் கோடிக்கு 166 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாகி உள்ளன. இதில் ஒன்றுகூட செயல்வடிவம் பெறவில்லை.
முதல்வர் ஸ்டாலின் 7 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, ரூ.34,014 கோடிக்கு 66 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். ஆனால், இதுவரை ஒரு பைசா முதலீடுகூட வரவில்லை. தமிழகத்தில் கங்கைகொண்டானில் தொழில் தொடங்க கையெழுத்திட்ட நிறுவனம் ஒருசில நாட்களில் ஆந்திராவுக்குச் சென்றது ஏன்? அமெரிக்காவின் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தமிழகத்தைச் சேர்ந்தவர். அந்த நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்யாமல், ஆந்திராவுக்குச் சென்றது ஏன்? எல்லாவற்றுக்கும் ஊழல்தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

