கோவையில் பிரதமர் மோடி தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி, நிதி விடுவித்து, ஆற்றிய உரையானது பாராட்டுக்குரியது என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கோவையில் பிரதமர் நரேந்திர மோடி தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025 ஐ தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி, நிதி விடுவித்து, ஆற்றிய உரையானது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது, நன்றிக்குரியது.
நேற்று (நவம்பர் 19) பிரதமர் மோடி கோவை கொடிசியா அரங்கில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்பதை உறுதி செய்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
நவம்பர் 21-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறுகிறது. குறிப்பாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த மாநாடு அமைகிறது.
பிரதமர் கோவை இயற்கை வேளாண் மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த இயற்கை வேளாண் கூட்டமைப்பு கண்காட்சியை துவக்கி வைத்து, பார்வையிட்டு, வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடியது பெருமைக்குரியது. மேலும் பிரதமர் விவசாயத்தில் சாதனைப் படைத்த விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தது போற்றுதலுக்குரியது.
பிரதமர் மோடி இந்த வேளாண் மாநாட்டில் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ. 2,000 வீதம், மொத்தம் ரூ. 18,000 கோடி நிதியை விடுவித்தார். இது இத்திட்டத்தின் 21-வது தவணை நிதி என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21,80,204 விவசாயிகள் பயனடைவார்கள்.

