மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறார்கள்!

25 0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தங்காலை கூட்டத்துக்கு பொலிஸார் ஆட்களை சேர்க்கிறார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் கட்சியின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறார்கள் என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  டி.வி.சானக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற   2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும்  தொழில்   அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்  உரையாற்றியதாவது,

அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும்போது ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து ஏதாவதொன்றை குறிப்பிட்டுச் செல்வார்.பின்னர் அதுவே பேசுபொருளாக காணப்படும்.கடந்த அரசாங்கங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ஜனாதிபதி தனது ஆட்சியில் உள்ள குறைகளை மறந்துவிட்டார்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவின் சட்ட பட்டம் பற்றி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் ஒரு விடயத்தை முன்வைத்து சேறு பூசினார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நாமல் ராஜபக்ஷவின் சட்ட பட்டம் பற்றி கேள்வியெழுப்பினார்கள்.அதன் பின்னர் இந்த விடயம் குறித்து  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சென்று வாக்குமூலமளித்தார். ஆனால் இன்று வரை இந்த விடயம் குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. தற்போது பிறிதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்கள்.

அரசாங்கத்துக்கு எதிராக நாங்கள் நாளை மறுதினம் கொழும்பில் மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம். எமக்கு போட்டியாக ஜனாதிபதி நாளை தங்காலையில் மக்கள் கூட்டத்தை நடத்துகிறார். அரசாங்கத்தின் கூட்டத்துக்கு பொதுமக்கள் எவரும் தன்னிச்சையாக செல்வதில்லை. ஆகவே  ஜனாதிபதியின்  கூட்டத்துக்கு  ஆட்களை சேர்க்கும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் இந்த அரசியல் கூட்டத்துக்கு ஆட்களை சேர்க்கும் அறிவிப்பை  அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விடுத்துள்ளார். இதற்கமைய  தங்காலை பொலிஸ் பிரிவில் இருந்து 397 பேர்,  பெலியத்த  பொலிஸ் பிரிவில் இருந்து 420 பேர், வலஸ்முல்ல பொலிஸ் பிரிவில் இருந்து 360 பேர்,  வீரகெட்டிய பொலிஸ் பிரிவில் இருந்து 414 பேர்,

மித்தெனிய பொலிஸ் பிரிவில் இருந்து 246 பேர், அங்குனுகொல்ல பொலிஸ் பிரிவில் இருந்து 264 பேர், கிரிந்த பொலிஸ் பிரிவில் இருந்து 36 பேர், துறைமுக பொலிஸ் பிரிவில் இருந்து 36 பேர் , திஸ்ஸமஹராம பொலிஸ் பிரிவில் இருந்து 198 பேர் என்ற அடிப்படையில் ஆட்களை அழைத்துவருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் பொய் என்று அரசாங்கத்தால் குறிப்பிட முடியுமா?

மக்கள் விடுதலை முன்னணியின் கட்சியின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறார்கள். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால்  பொலிஸார் அதிருப்தியடைந்துள்ளார்கள் என்றார்.