கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களை போன்று அந்த பிரதேச மக்களுக்கு நிர்வாக அதிகாரங்களை வழங்குவதற்கு தடையாக செயற்படுகின்றதா, பழைய அரசாங்கங்களை போன்று இந்த அரசாங்கமும் நியாயத்தை மறக்க கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இந்நாட்டில் 30 ஆண்டுகாலமாக அநீதி இழைக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு எதிராக நடக்கின்ற ஒரு நிர்வாக அத்துமீறல், நிர்வாக குறைப்பு போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு இந்த சபையில் நீதியை வேண்டி சில விடயங்களை முன்வைக்கின்றேன்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் 30 வருட காலமாக அந்த பிரதேச மக்களுக்கு பிரதேச செயலக அதிகாரங்கள் கொடுக்கப்படாமல் இருக்கின்றது. அவர்களுக்குரிய நிர்வாக அதிகாரம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அரசாங்கம் என்ன பதிலை கூறப் போகின்றது இது தொடர்பில் இந்த சபையில் நீதியை வேண்டி நிற்கின்றேன்.
கடந்த கால அரசாங்கங்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக ரீதியிலான பலதரப்பட்ட தடைகளையும்இ அநீதிகளையும் அந்த மக்களுக்கு இழைத்துள்ளன.
இந்நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் மற்றும் அமைச்சர் அந்த மக்களுக்கு நிர்வாக ரீதியில் என்ன தீர்வை முன்வைக்கப் போகின்றனர்.
1993ஆம் ஆண்டில் இதற்கான அமைச்சரவை பத்திரம் ஊடாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஒர பிரதேச செயலமாக தரமுயர்த்தப்பட்டது.
ஆனால் இன்று அந்த பிரதேச செயலகத்திற்குரிய அதிகாரங்கள் மறுக்கப்பட்டுள்ளன. 29 கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கியது.
அமைச்சரவை அனுமதி பெற்ற பிரதேச செயலகமொன்றை என்ன காரணத்திற்காக என்ன நோக்கத்திற்காக கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துடனோ அல்லது வேறு நிறுவனத்துடனோ சேர்க்க முடியும்.
இதில் நீதி, நியாயம் என்ன? என்று கேட்கின்றேன். அமைச்சரவை அனுமதி பெற்ற பிரதேச செயலகத்தை இன்னுமொரு பிரதேச செயலகத்துடன் இணைக்க முடியாது. அப்படி செய்வதென்றால் அந்த அமைச்சரவை அனுமதிப் பத்திரத்தை ரத்துச் செய்ய வேண்டும்.
சட்டப்படி அமைச்சின் செயலாளரோ அல்லது மாவட்ட செயலாளரோ மாற்ற முடியும். கடந்த கால அரசாங்கங்கள் எவ்வாறு இதனை திட்டமிட்டு நில மோசடியில் அதனை கொள்ளையடிப்பதற்காக அந்த அதிகாரங்களை கொடுப்பதற்கு தடையாக இருந்து செயற்பட்டதோ அதேபோன்று இந்த அரசாங்கமும் செயற்படுகின்றதா? பல தடவைகள் உங்களிடம் கேட்டிருந்தோம்.
குழுவொன்றை அமைத்து இது தொடர்பில் ஆராய்வதாக கூறியிருந்தீர்கள். ஆனால் அதனை செய்யவில்லை. இதற்கான காரணம் என்ன? நீங்களும் கடந்த கால அரசாங்கங்களை போன்று இருக்கப் போகின்றீர்களா?, என்பதை குறிப்பிடுங்கள்.
இந்த அரசாங்கத்திடம் நீதிகளை கேட்கின்றோம். கடந்த அரசாங்கங்கள் செய்த தவறுகள், மோசடிகளை கண்டறிந்து இந்த அரசாங்கம் சரியாக செய்யும் என்று நம்பியிருந்தோம். நீங்களும் பழைய அரசாங்கங்களை போன்று நியாயத்தை மறுக்கக்கூடாது என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

