போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கும்போது மண்ணெண்ணெய் பட்ட சாரைப்பாம்பு போல் எதிர்க்கட்சியினர் கலக்கமடைகிறார்கள். போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை ஒருபோதும் இடைநிறுத்தப் போவதில்லை என தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
போதைப்பொருளுக்கு எதிராகவும், பாதாளக் குழுக்களுக்கு எதிராகவும் தேசிய மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள. ஆனால் எதிர்க்கட்சியினர் மாத்திரம் தான் மண்ணெண்ணை பட்ட சாரை பாம்பு போல் எதிர்க்கட்சியினர் கலக்கமடைந்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
போதைப்பொருளுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளை ஒருபோது இடைநிறுத்த போவதில்லை.ஜனாதிபதி தலைமையில் நாளை தங்காலை பகுதியில் போதைப்பொருளுக்கு எதிரான தேசிய செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்படும்.
போதைப்பொருள் வர்த்தகத்திலும், பாதாளக் குழுக்களுடனும் தொடர்புக் கொண்டிருந்தவர்கள் தான் இன்று போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.நாட்டு மக்கள் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
ஓய்வூதியலாளர்களின் கொடுப்பனவு பற்றி எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள்.ரணில், மைத்திரி மற்றும் சஜித் அரசாங்கம் தான் இந்த பிரச்சினையை ஏற்படுத்தியது. சம்பள அதிகரிப்பு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உணர்ந்து சம்பளத்தை அதிகரித்துள்ளோம்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை ஆராயாமலேயே எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டக்களை முன்வைக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாகவே இ ந்த வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அடிப்படை பிரச்சினைகளுக்கு கட்டம் கட்டமாக தீர்வு காண்போம் என்றார்.

