எல்லை நிர்ணயத்தை தேர்தல் பிற்போக்கும் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம் – ஜே.சி. அலவத்துவல

24 0

தேர்தல்களை பிற்போடுவதற்கு அரசியல்வாதிகள் கையில் எடுக்கும் ஆயுதம்  எல்லை நிர்ணயமாகும். அதனால் எல்லை நிர்ணய நடவடிக்கையை மீண்டும் கையில் எடுக்காமல் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19)  நடைபெற்ற 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு  மேலும் உரையாற்றுகையில்,

அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறையில் திருத்தம் மேற்கொண்டு, தேர்தலை நடத்தாமல்,  அவர்களுக்கு பொதுத் தேர்தலில் கிடைக்கப்பெற்ற வாக்குகளை தக்கவைக்கும்  நோக்கில் அவசரமாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தியது.

தற்போதுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்ல் திருத்தம் நல்லாட்சி அரசாங்க காலத்தில் கொண்டுவரப்பட்டதாகும். அதில் தவறு இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதனாலே தேர்தல் முறையில் திருத்தம் மேற்கொண்டு, தேர்தலுக்கு செல்ல வேண்டும் என நாங்கள் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தோம்.

தற்போது அதிகமான உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை தனித்து ஒரு கட்சிக்கு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.  அரசாங்கம் வெற்றிகொண்ட அதிகமான மன்றங்களின் ஆட்சி, ஏனைய கட்சிகளின் உதவியுடனே அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அந்த சபைகளின் தலைவர்களுக்கு சபையை சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறையில் திருத்தம் மேற்கொண்டு பழைய முறையில் நடத்தியிருந்தால், இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது.

அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்கும்போது, சபை உறுப்பினர்களின் விருப்பத்துக்கு மாற்றமாகவே ஒருசில மாகாண ஆணையாளர்கள் செயற்பட்டார்கள். அதன் பெறுபேறுகளை தற்போது காண்கிறோம். மாகாண ஆணையாளர் தனது எண்ணத்தின் பிரகாரம் சபைகளின் ஆட்சியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தாலும் தற்போது அந்த உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவு திட்டம் சபைக்கு சமர்ப்பிக்கப்படும்போது, பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போயிருக்கின்றன.

அதனால் அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளின் தேவையை நிறைவேற்றுவதற்காக,  அந்த மன்றங்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கையை கருத்திற்கொள்ளாமல் தனது எண்ணத்தின் பிரகாரம் தீர்மானம் மேற்கொண்ட அரச அதிகாரிகள், அவர்கள் ஓய்வுபெற்றுச் சென்றாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்.

அதேநேரம் தேர்தலை பிற்போதடுவதற்கு ஆட்சியாளர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் எல்லை நிர்ணயமாகும். ரணில் விக்ரமசிங்கவும் அதனை கையில் எடுத்தார். என்றாலும்  நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை இருப்பதால் தேர்தலை நடத்த பணம் இல்லை என்று  தெரிவித்ததிருந்தார். ஆனால் தற்போது  தேர்தலை நடத்த பணம் இருப்பதாகவும் தேர்தலை நடத்துவதற்கு முறை ஒன்று இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவிக்கிறார்.

ஜனாதிபதியின் கேள்விக்கு பதிலாக, தற்போது சட்டமா அதிபர் இதுதொடர்பில் அறிவிப்பொன்றை விடுத்திருக்கிறார். அதில் மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்தலாம் என்றும் அதற்கு பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே அரசாங்கம் சட்டமா அதிபரின் அறிவிப்பின் பிரகாரம், மாகாண சபை தேர்தலை பழை முறையில் நடத்த பாராளுமன்றத்துக்கு பிரேரணை கொண்டுவந்தால் அதற்கு நாங்கள் ஆதரவளி்க்க தயாராக இருக்கிறோம் என்றார்.