கடந்த ஆண்டு பங்களாதேஷில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில், ஷேக் ஹசீனா “குற்றவாளி” என தீர்ப்பளித்த, டாக்கா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (17) டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதி, ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய தன் நாட்டு மக்களையே, அவர் கொலை செய்ய உத்தரவிட்டமை உறுதியாகியிருப்பதாக தீர்ப்பின்போது தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பங்களாதேஷ் அரசுக்கு எதிராக மாணவர்களால் நடத்தப்பட்ட பேராட்டங்களை அரசு தீவிரமாக ஒடுக்க நடவடிக்கை எடுத்திருந்தது. இதில் சுமார் 1400 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷேக் ஹசீனா பங்களாதேஷிலிருந்து தப்பிச் சென்று, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
78 வயதுடைய ஷேக் ஹசீனா தற்போதும் இந்தியாவிலேயே தலைமறைவாகியுள்ள நிலையிலேயே பங்களாதேஷ் நீதிமன்றம் இவ்வழக்கினை விசாரித்து, அவருக்கு எதிராக மரண தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை கொல்வதற்கு கொடிய அடக்குமுறையை பிரயோகித்து கடுமையான உத்தரவுகளை பிறப்பித்த குற்றச்சாட்டிலேயே ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

