டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு பாரபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது என நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் 2024ஆம் ஆண்டு தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களின்போது ஷேக் ஹசீனா தனது அரசியல் மற்றும் பதவி பலத்தை பிரயோகித்து பிறப்பித்த கடுமையான உத்தரவுகளால் பல வன்முறைகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக இன்று (17) டாக்கா நீதிமன்றத்தில் உறுதிபடுத்தப்பட்டது.
அத்துடன் அவர் பதவி நீக்கப்பட்டது முதல் இந்தியாவில் தலைமறைவாகியிருக்கிறார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகளின்போதும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் தலைமறைவாக இருக்கின்ற இச்சந்தர்ப்பத்திலேயே இவ்வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனக்கு எதிராக டாக்கா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விதித்த மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
“நான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை.
எனக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தீரப்பு, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு மோசடி தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு பாரபட்சமானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது.
கடந்த ஆண்டு போராட்டம் நடந்தபோது நாங்கள் கட்டுப்பாட்டை இழந்தோம். எனவே, அதனை குடிமக்கள் மீதான முன்கூட்டிய திட்டமிட்ட தாக்குதல் என்று வகைப்படுத்த முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

