இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

22 0

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, திருகோணமலை – பட்டிகலுவ வீதியில் உள்ள பஞ்சங்கேணி பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநரும் பின்னால் இருந்த பயணி ஒருவரும் பலத்த காயமடைந்து வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள்  ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் காத்தான்குடியைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிகம சந்தியில், அம்பாந்தோட்டையிலிருந்து கொன்னொருவ நோக்கிப் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று அதே திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் அம்பாந்தோட்டையை சேர்ந்த 79 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய உழவு இயர்நிதரத்தின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.