சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பன குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரான்சின் மிகப்பெரிய சிமென்ட் தயாரிக்கும் நிறுவனமான Lafarge விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறது.
சிமென்ட் தயாரிப்பாளரான ஹோல்சிம் நிறுவனத்தின் துணை நிறுவனமான Lafarge மீது பயங்கரவாத அமைப்புக்கு நிதியளித்தது மற்றும் உள்நாட்டுப் போரின் போது வடக்கு சிரியாவில் ஒரு ஆலை இயங்குவதற்காக ஐரோப்பிய தடைகளை மீறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
Lafarge நிறுவனமானது ஐ.எஸ் மற்றும் நுஸ்ரா முன்னணி ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு 2013 முதல் செப்டம்பர் 2014 வரை மொத்தம் 5 மில்லியன் யூரோ நிதி அளித்துள்ளது.
தற்போது பயங்கரவாதத்திற்கு நிதியளித்த வழக்கில் Lafarge நிறுவனம் பிரான்சில் விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த Holcim குழுமத்துடன் 2015 முதல் Lafarge நிறுவனம் இயங்கி வருகிறது.முன்னாள் Lafarge நிர்வாகிகள் உட்பட எட்டு பேர் 2017 முதல் பயங்கரவாத தடுப்பு சட்டத்தரணி அலுவலகத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சட்டத்திற்கு உட்பட்டு இந்தப் பிரச்சினையை பொறுப்புடன் கையாண்டு வருவதாக Lafarge தெரிவித்துள்ளது. இதனிடையே, அமெரிக்காவில் விசாரிக்கப்படும் இன்னொரு வழக்கில், ஐ.எஸ் மற்றும் நுஸ்ரா முன்னணி ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு 6 மில்லியன் டொலர் நிதியளித்ததாக 2022ல் Lafarge ஒப்புக்கொண்டுள்ளது.
சிரியாவில் உள்நாட்டு மோதல் வெடித்த பிறகு, ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சப்ளையர்கள் சோதனைச் சாவடிகள் வழியாகச் செல்ல அனுமதிக்கும் வகையில் இந்த நிதி அளிக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளனர்.

இந்த வழக்கில், Lafarge குழுமம் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பறிமுதல் மற்றும் அபராதமாக 778 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தியது.
ஆனால், பிரான்சில் நடைபெறும் விசாரணையில், குற்றவாளி என நிரூபணமானால் மிகக் குறைவான அபராதம் விதிக்கப்படவே வாய்ப்பு என கூறுகின்றனர்.

