மொத்த சனத்தொகை 21.7 மில்லியன் ; 51.7 சதவீதம் பெண்கள் ; 48.3 சதவீதம் ஆண்கள்

26 0

2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய, இலங்கையின் மொத்த சனத்தொகை  21.7  மில்லியனாக (21,781,800) பதிவாகியுள்ளது. அதில் 51.7 சதவீதம் பெண்களும், 48.3 சதவீதம் பெண்களும் காணப்படுகின்றனர். கம்பஹா மாவட்டம் அதிக சனத்தொகை (2436142) மாவட்டமாகவும், முல்லைத்தீவு குறைவான சனத்தொகை (122619) மாவட்டமாகவும் பதிவாகியுள்ளது.

சனத்தொகை மதிப்பீட்டில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஆயுட்காலம் அதிகரித்துள்ளதுடன், 65 வயதுக்கு மேற்பட்டோர் வீதம் 12.6. சதவீதமாக அதிகரித்துள்ளதுடன், தங்கி வாழ்வோரின் வீதம் 49.8 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு ,இறுதி அறிக்கையை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டது.

சனத்தொகை

2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய ,இலங்கையின் மொத்த சனத்தொகை  21.7  மில்லியனாக (21,781,800) பதிவாகியுள்ளது. அதில் 51.7 சதவீதம் பெண்களும்,48.3 சதவீதம் பெண்களும் காணப்படுகின்றனர். நாட்டில் 15 வயதுக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கை 25.2 சதவீதத்தில் இருந்து 20.7 சதவீதமாக குறைவடைந்துள்ளது. அதேபோல் இந்த காலக்கட்டத்தில்  65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் சனத்தொகையானது 7.9 சதவீதத்திலிருந்து, 12.6. சதவீதமாக அதிகரித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் 15-64 வயதுக்குட்பட்டவர்களின் சனத்தொகையானது மொத்த சனத்தொகையில் 66.7 சதவீதமாக காணப்படுகிறது. இது 2012 இல் 66.9 சதவீதமாக காணப்பட்டது. இலங்கையின் மொத்த சனத்தொகையில் 74.1 சதவீதம் சிங்களவர்கள், 12.3 சதவீதம் ,இலங்கைத் தமிழர்கள்,10.5 சதவீதமானோர், இலங்கை முஸ்லிம்கள், 2.7 சதவீதமானோர், இந்திய தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்று பதிவாகியுள்ளனர். 0.3 சதவீத கட்டமைப்புக்குள் பறங்கியர்கள், மலாயர்கள், இலங்கை செட்டிகள், பரதர்கள், வேடர்கள் உட்பட பிற இனக்குழுக்களைச் சேர்ந்தோர் உள்ளடங்குகின்றனர்.

மத அடிப்படையில் நாட்டில் 69.8 சதவீதம் பௌத்தர்கள், 12.6 சதவீதம் , இந்துக்கள், 10.7 சதவீதம், இஸ்லாமியர்கள்,5.6 சதவீதம்  ரோமன் கத்தோலிக்கர்கள் மற்றும் 1.3 சதவீதம் ஏனைய கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர்.

2012-2024 ஆண்டு வரையான காலக்கட்டத்தில் இலங்கையின் சனத்தொகையானது ஆண்டுதோறும் 0.5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இக்காலப்பகுதியில் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 325 தொடக்கம் 349 நபர்கள் வரை அதிகரித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு சனத்தொகை மதிப்பீட்டில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஆயுட்காலம் அதிகரித்துள்ளதுடன், வயது முதிர்ந்தோர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.நகரம் மற்றும் மாவட்டங்களுக்கு, இடையிலான , இடப்பெயர்வு புதிய போக்கினை காட்டுகிறது.

வீட்டு வசதிகள்

நாட்டில் வசிக்கும் வீட்டுக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை 6,030,541 ஆக காணப்படுகிறது. அதிகளவான வீட்டுக்கூறுகள் மேல்மாகாணத்தில் காணப்படுகிறது.குறைவான வீட்டுக்கு கூறுகளை வடக்கு மாகாணம் கொண்டுள்ளது.

நாட்டில் உள்ள வீட்டுக்கூறு வகைகளில் 95.66 சதவீதமானவை தனி வீடுகளாகவும், 4.32 சதவீதமான வீடுகள் இணைந்த வீடுகளாகவும்,0.02 சதவீதமானவை ஏனைய வீட்டுக்கூறுகளாகவும் பதிவாகியுள்ளன.

வீட்டுக்கூறுகளில் 97.9 சதவீதமானவை சுவர்களால் நிலையான தன்மையிலான பொருட்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 2.1 சதவீதமான வீடுகள் தற்காலிகமான பொருட்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

மொத்த வசிக்கும் வீட்டுக்கூறுகளில் காணப்படும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 6,111,315 ஆகும். 38.9 சதவீதமானோர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் விநியோகிக்கப்படும் நீரைப் பெற்றுக்கொள்கிறார்கள். 97.4 சதவீதமானோர் மின்பாவனையாளர்களாக உள்ளார்கள்.92.2 சதவீதமானோருக்கு  தனது வீட்டுக்கூறில் மலசலகூட வசதி காணப்படுகிறது.