சவூதி அரேபியாவிலிருந்து அனுப்பப்பட்டு மிகநீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித அல் குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்காக ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த 2024 மே மாதம் 16ஆம் திகதி சவூதி அரேபியாவின் மன்னர் பஹத் புனித அல்குர் ஆன் அச்சிடல் பணியகத்திலிருந்து இலங்கையில் வதியும் முஸ்லிம்களின் சன்மார்க்க பணிகளுக்காக தமிழ் மொழிபெயர்ப்புடன் அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆனின் பிரதிகள் அடங்கிய கொள்கலன் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இது தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் காத்திரமான உரையொன்றை ஆற்றியிருந்ததுடன் இவ்விடயம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டமொன்றையும் நடத்தி அவர்கள் அனைவரின் கையொப்பங்களையும் பெற்று கடிதமொன்றை கடந்த வாரம் புத்தசாசன மற்றும் சமய, கலாசார அமைச்சரிடம் கையளித்துள்ளார்.
அக்கடிதத்தில் மேற்படி அல்குர்ஆன் பிரதிகளில் எந்த வித மாறுதலும் இல்லாமல் அதன் புனிதத்தன்மை பேணப்பட்டு சவூதி அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்ட விடயத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

