அளவத்துகொடை சோதனைச் சாவடியில் ‘மதனமோதகம்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

25 0

மாத்தளையில் இருந்து கம்பளை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றை அளவத்துகொடைப் பிரதேசத்திலுள்ள சோதனைச் சாவடி ஒன்றில் வைத்து பரிசோதிக்கப்பட்ட போது ‘மதனமோதக’ எனப்படும்  போதைப் பொருள் என சந்தேகிக்கப்படும் 2,375 உருண்டைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளவத்துகொடை சையின்ஸ்டன் சந்தி பொலிஸ்  தடையில் வைத்து அளவத்துகொடைப் பொலிஸார் இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

இதில் 14 கிராம் எடை கொண்ட 95 பெட்டிகள் காணப்பட்டுள்ளன. பெட்டி ஒன்றில் 25 உருண்டைகள் வீதம் இருந்துள்ளன. மேற்படி ஆயுர்வேத தயாரிப்புக்களில் போதைப் பொருட்கள் கலக்கப்பட்டு சிலரால் போதைக்காகப் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இவை தயாரிப்பு  மற்றும் இடத்திற்கு இடம் எடுத்துச் செல்லல் போன்றவற்றிற்கு அனுமதிப்பத்திரம் தேவை, அப்படியான அனுமதிப்பத்திரம் இன்றி இவை உடன் வைத்திருந்த குற்றத்திற்காகவும் எடுத்துச் சென்ற குற்றத்திற்காகவும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.