மருது சகோதரர்கள் நினைவு தினத்தையொட்டி திருப்பத்தூரில் உள்ள அவர்களது சிலைகளுக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மணிமண்டபத்தில் மருது சகோதரர்கள் நினைவுதினம் அரசு நிகழ்ச்சியாக நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.ஆர்.பெரிய கருப்பன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன், சிவ.வீ.மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், பேருந்து நிலையம் அருகே உள்ள மருது சகோதரர்களின் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிகளில், எம்எல்ஏக்கள் தமிழரசி, மாங்குடி, எஸ்.பி. சிவபிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.பின்னர் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், மொழி, கலாச்சாரம், பண்பாட்டை பெருமைப்படுத்தும் வகையிலும் மணிமண்டபம், நினைவுச் சின்னங்களை திமுக அரசு அமைத்து வருகிறது. சங்கரபதி கோட்டை பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகிறது. ஆளுநருக்கு தமிழக வரலாறு குறித்து என்ன தெரியும்? இவ்வாறு அவர் கூறினார்.

