இலங்கை இராணுவத்தால் 76 பயனற்ற வாகனங்கள் புனரமைப்பு!

34 0

இலங்கை இராணுவத்தால் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் இருந்த 76 வாகனங்களை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் பணிப்புரைக்கமைய புனரமைக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வாகனங்கள் இன்று (24) முதல் மீண்டும் இராணுவத்தின் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படவுள்ளன.

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ (Clean Sri Lanka) நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக அமுல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட இந்த வாகனங்களை மீண்டும் இராணுவ சேவைக்கு இணைத்துக் கொள்வதன் மூலம், இராணுவத்திற்காக வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படும் அதிகளவான வெளிநாட்டு நாணயத்தை சேமிக்க முடிந்துள்ளது.

அத்துடன், இந்த வாகனங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம், வாடகை அடிப்படையில் இராணுவத்தால் பெறப்பட்ட வாகனங்களுக்காக மாதாந்தம் செலவிடப்பட்ட சுமார் 10 மில்லியன் ரூபா பணத்தை அரசாங்கத்திற்கு சேமிக்க முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இராணுவத்தின் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி மூலம் அமுல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், ட்ரக் வாகனங்கள், பேருந்துகள், நீர் பவுசர்கள், யூனி பஃபல் வாகனங்கள், கெப் வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள், வேன்கள் மற்றும் கழிவு பவுசர்கள் (Gully Bowsers) உள்ளிட்ட 76 வாகனங்கள் இவ்வாறு புனரமைக்கப்பட்டு மீண்டும் சேவைக்கு இணைக்கப்பட்டுள்ளன