தற்போது இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள BYD வாகனங்களின் மோட்டார் திறன் (Motor Capacity) தொடர்பான விசாரணைகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (24) சுங்கத்திற்கு உத்தரவிட்டது.
சுங்கத் திணைக்களம் நாட்டின் பொருளாதாரத்திற்கு வரிப் பணத்தைச் சேகரிப்பது மிகவும் முக்கியமானது என்பதுடன், வாகனங்களை வாங்குபவர்கள் மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் நலன்கள் குறித்தும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ரொஹந்த அபேசூரிய திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனால், இந்த விசாரணைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், அதற்கு உதவுமாறும் மனுதாரர் தரப்பினருக்கு நீதிபதி அறிவித்தார்.
சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது வாகனங்களை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி ஜோன் கீல்ஸ் சிஜி நிறுவனம் (John Keells CG Company) தாக்கல் செய்த மனு அழைக்கப்பட்ட போதே நீதிபதி இதனைத் தெரிவித்தார்.
இம்மனு இன்று அழைக்கப்பட்டபோது, இலங்கை சுங்கத் திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பிணை அடிப்படையில் நிபந்தனைகளுடன் விடுவிக்க முடியும் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விசாரணைகளுக்கு மனுதாரர் நிறுவனம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வலியுறுத்தினார்.
மனுதாரர் நிறுவனத்தால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் ஸ்கேன் இயந்திரம் (Scan Machine) குறித்த அறிக்கை அடுத்த திங்கட்கிழமை சீராக்கல் மனு மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
எவ்வாறாயினும், மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பர்சானா ஜமீல் (Farzana Jameel), சுங்கத் திணைக்களம் இந்த வாகனங்களை தடுத்து வைத்துள்ள விதம் சட்டத்திற்கு முரணானது என்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
மனுதாரர் தரப்பினருக்கும் பிரதிவாதி தரப்பினருக்கும் இடையில் நீண்ட விளக்கங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், இந்த வாகனங்களை பிணையில் விடுவிப்பது தொடர்பாக இணக்கப்பாடு ஏற்படவில்லை.
அதன்படி, இந்த வழக்கை சமரசப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எதிர்வரும் 28ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

