குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2613 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.2026 மார்ச் மாதமளவில் 1110 பேருக்கு குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்கான நியமனங்கள் வழங்கப்படும் .அத்துடன் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் விசேட பணிகளுக்கு 6000 ரூபாய் கொடுப்பனவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சந்திராணி கிரியெல்ல, எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் பதிலளித்ததாவது,
சுகாதாரத் துறைக்காக குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் கர்ப்பத்திற்கு முந்தைய பராமரிப்பு, கர்ப்பகால பராமரிப்பு மற்றும் பிரசவத்துக்குப் பிந்தைய பராமரிப்பு ஆகிய துறைகளில் தரமானதும், கருணையுடனும் கூடிய சேவைகளை வழங்கி வருவதுடன், தாய்சேய் சுகாதார மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களையும் உள்ளடக்கியவாறு சுகாதார கல்வி வழங்குதல் போன்ற சேவைகளையும் வழங்குகிறார்கள்.
இன்றளவில் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. மத்திய அரசின் கீழுள்ள வைத்தியசாலைகளில் 430,மாகாண சபையின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் 2183 என்ற அடிப்படையில் மொத்தமாக 2613 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.குடும்ப சுகாதார உத்தியோகத்தர் பயிற்சிக் கல்லூரிகளில் 1110 குடும்பநல உத்தியோகத்தர்கள் பயிற்சிப் பெறுவதுடன், இவர்கள் 2026 மாதத்துக்குள் தமது பயிற்சிக் காலத்தை நிறைவுள்ளார்கள். பயிற்சியை நிறைவு செய்தவுடன் இவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும்.
அதேபோல் மேலும் 1000 பேர் கொண்ட குழுவொன்றை எதிர்காலத்தில் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கு முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதி பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
2026 ஆம் ஆண்டுக்குள் கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்குவதற்கும், விசேட பணிகளுக்கு 6000 ரூபாய் கொடுப்பனவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீருடை கொடுப்பனவுக்கு 28 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

