அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு என்று மக்களுக்கு வீண் அச்சத்தை ஏற்படுத்த ஒருதரப்பினர் முயற்சி!

39 0

அரச வைத்தியசாலைகளுக்கு தடையின்றி மருந்துகளை விநியோகிப்பதற்கும், மருந்து பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மருந்து தட்டுப்பாடு என்று மக்கள் மத்தியில் வீண் அச்சத்தை ஏற்படுத்த ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள் என சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழான  2446/ 34 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  அஜித் பி. பெரேரா களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் மருந்து பற்றாக்குறை  நிலவுவதாக குறிப்பிட்டார்.களுத்துறை மாவட்டத்தில் பிரதான மூன்று  அரச வைத்தியசாலைகள் உள்ளன.அங்கு இவர்கள் குறிப்பிடுவதை போன்று பாரதூரமான  வகையில் மருந்து தட்டுப்பாடுகள் ஏதும் காணப்படவில்லை.

சட்டத்தின் பிரகாரம் மருந்துகளின் தரம் மற்றும் மருந்து விநியோகம் தொடர்பில் ஆராயும் பொறுப்பு   தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த அதிகார சபைகளில் பல பிரச்சினைகள் காணப்பட்டன. அத்துடன் சுகாதார அமைச்சும் ஊழல் மிகுந்ததாக காணப்பட்டது. தற்போது அவ்வாறான நிலைமை இல்லை.

இரண்டு  ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மருந்துகள் பரிந்துரை மீளாய்வுக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பொருட்களின் பட்டியலுடன் தொடர்புடையதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கங்களைக் கொண்ட  ஒரு குழுவினால் முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன்படி ஆண்டின்  இறுதிக் காலாண்டில் நிறுவனங்களில் இருந்து பெறப்படும் வருடாந்த மதிப்பீட்டின் அடிப்படையில்  அடுத்த ஆண்டின் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் 11 மாதக் காத்திருப்பு காலத்துடன் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்காக அரச மருந்தக கூட்டுத்தாபனத்துக்கு மருந்து விநியோகப் பிரிவு ஊடாக அனுப்பல் கட்டளைகள் வழங்குவதே பொதுவான நடைமுறையாகும்.

மருந்து கொள்வனவை  வினைததிறனாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  அரச வைத்தியசாலைகளுக்கு தடையின்றி மருந்துகளை விநியோகிப்பதற்கும், மருந்து பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மருந்து தட்டுப்பாடு என்று  மக்கள் மத்தியில் வீண் அச்சத்தை ஏற்படுத்த ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள்.  மருந்துகளின் தரம் மற்றும் விநியோகத்தை சீராக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சுக்கு உண்டு.இந்த பொறுப்பை சிறந்த முறையில் செயற்படுத்துவோம் என்றார்.cc