நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு மருந்து பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வழிமுறைகளை உருவாக்குங்கள் . அதனை விடுத்து சுவசெரிய சேவையின் 1990 இலக்கத்தை மாற்றி 8889 என்று இலக்கமிட முயற்சிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழான
2446/ 34 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது
இலங்கையின் சுகாதார சேவை ஒருகாலத்தில் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டு, வரவேற்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் சுகாதார சேவை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. மருந்து தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.இந்த பிரச்சினை இன்றளவிலும் காணப்படுகிறது.
அரச வைத்தியசாலைகளில் இன்றளவிலும் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு காணப்படுகிறது.இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடன் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
சுவசெரிய சேவையை மாற்றியமைக்க போவதில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.ஆனால் அந்த சேவையை மாற்றியமைப்பதாக அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டார்.இது அரசாங்கத்தின் முரண்பாட்டையும், கொள்கை வேறுப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. 1990 என்ற இலக்கத்தை மாற்றி 8889 என்று இலக்கமிட அரசாங்கம் முயற்சிக்க கூடாது. 1990 என்று சுவசெரிய இலக்கம் மக்கள் மனங்களில் உள்ளன.
மருந்துகளின் தரம் மற்றும் விலைகள் குறித்து அரசாங்கம் உறுதியான கொள்கையை கடைபிடிக்க வேண்டும். நிர்ணய விலைக்கு மாறாக ஒரு தரப்பினர் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றார்.

