தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கற்கைகளை தொடரும் மாணவர்களுக்காக மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் நடத்தப்படுகின்ற எழுத்துப் பரீட்சை கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படாமல், இழுத்தடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பரீட்சையில் தோற்றுவதற்காக மாணவர்கள் பணம் செலுத்தி விண்ணப்பித்திருந்த போதிலும் கடந்த பல மாதங்களாக இதனை நடத்தாததன் காரணமாக தங்களது செயன்முறைப் பரீட்சைகளும் தாமதமடைந்துள்ளதாக கிழக்கு மாகாண மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
உரிய காலத்தில் மேற்படி பரீட்சையை நடத்தாமல் காலம் தாழ்த்துவதனால் தங்களது பிள்ளைகள் உரிய காலத்தில் கற்கைநெறிகளை முடித்து தொழில் வாழ்க்கைக்குள் நுழைய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தொழில் பயிற்சி வழங்கும் நிறுவனங்களில் சில NVQ (மட்டம் 4) கற்கைநெறிகளை தொடருகின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் எழுத்துப் பரீட்சை ஒன்று நடத்தப்படுகின்றது. அதன் பின்னரே செய்முறை பரீட்சைக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இருப்பினும் கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு இந்தப் பரீட்சை இன்னும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நடைபெறவில்லை. ஒவ்வொரு மாணவரும் தலா 1000 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
முன்னதாக 500 ரூபாய் கட்டணமே அறவிடப்பட்டது. பின்னர் இணையவழியில் பரீட்சை நடாத்துவதாக கூறி கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு கடைசி நேரத்தில் இணையவழி பரீட்சைக்கு பதிலாக பரீட்சைத் தாள்களே வழங்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையிலேயே ஜூன் – ஜூலை மாதங்களில் நடந்திருக்கவேண்டிய எழுத்துப் பரீட்சை இதுவரை கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் நடத்தப்படவில்லை எனத் தெரிகின்றது. எனவே இது தொடர்பில் ஜனாதிபதியும் கல்வி அமைச்சரும் தொழிற்கல்வி பிரதி அமைச்சரும் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

