அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (COPA) அறிக்கைகளை பொலிஸ் மாஅதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்கு பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு அனுமதி அளித்துள்ளது.
அண்மையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் குழு கூடியிருந்தது.
பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் திருத்தப்பட்டுள்ள நிலையில், COPE மற்றும் COPA குழுக்களின் அறிக்கைகள் சபாநாயகருக்கும் சமர்ப்பிக்கப்படும் அதேவேளை பொலிஸ் மாஅதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கும் சம நேரத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, COPE மற்றும் COPA குழுக்களுக்கு புதிய அதிகாரங்களை அங்கீகரிப்பது தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் குழுவின் அறிக்கை, எதிர்வரும் புதன்கிழமை (22) சபாநாயகரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர், அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக அது சார்ந்த ஆவணங்களுடன் சேர்க்கப்படும்.
COPE மற்றும் COPA குழுக்களின் குறித்த நிலையியற் கட்டளைகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன், அந்தக் குழுக்களின் அறிக்கைகளை நேரடியாக பொலிஸ் மாஅதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுப்பும் அதிகாரத்தை இரண்டு குழுக்களும் பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

