ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தம் காரணமாகவே மின்சாரக் கட்டண அதிகரிப்பு நிறுத்தப்பட்டது

46 0

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தே அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தத்தால் மின் கட்டண அதிகரிப்புக்கான முயற்சி தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செவ்வாய்கிழமை (14) கண்டியில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

மிகக் குறுகிய காலத்துக்குள் ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்கு பாரிய பணிகளை ஆற்றியிருக்கிறது. அரசாங்கமும், மின்சார சபையும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிக்க முற்பட்டன. எனினும் இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக தற்போது அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. எதிர்க்கட்சியின் வகிபாகம் என்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துவதல்ல. மாறாக மக்களுக்கு உண்மையான பொறுப்பை நிறைவேற்றுவதாகும். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எடுத்த இந்த முடிவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசாங்கத்தின் நியாயமற்ற மின்சாரக் கட்டண அதிகரிப்பு, ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தத்தின் காரணமாகவே நிறுத்தப்பட்டது. எதிர்வரும் நாட்களில் இந்த மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மின் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்கால் குறைப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்டது. வழங்கிய வாக்குறுதிக்கமைய மின் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் வீதிக்கிறங்கி போராடுவோம்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தே அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. தற்போதைய ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்த போது, முந்தைய அரசாங்கம் இணக்கப்பாடு எட்டிய நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக தெரிவித்தனர். ஆனால் தெளிவான அதிகாரத்தோடு ஆட்சியில் இருக்கும் இவர்கள் இன்னும் இந்த ஒப்பந்தத்தை மாற்றவில்லை.

அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் அடிமைகளாக மாறி விட்டனர். மக்கள் இப்போது மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். இன்று நாட்டின் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர். மின்சாரக் கட்டணங்களை அதிகரித்து, சாதாரண மக்கள் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இரகசிய ஒப்பந்தங்கள் அற்ற இல்லாத, மக்களைக் காட்டிக் கொடுக்காத, நடைமுறைக்கு ஏற்ற, மக்கள் நலன் சார்ந்த, எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி, நாட்டு மக்களின் மனித மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் என்றார்.