“இரத்தபோக்கை முடிவுக்கு கொண்டுவருவோம்”-கொழும்பில் பேரணி

57 0

விபத்துகளால் ஒவ்வொரு நாளும் 6 பேர் உயிரிழப்பதுடன், ஏராளமானோர் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அங்கவீனர்களாகுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

அனர்த்தங்களால் ஏற்படும் “இரத்தபோக்கை முடிவுக்கு கொண்டுவருவோம்” என்னும் தொனிப்பொருளில் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (12) சுகாதார அமைச்சர் வைத்தியர் நளி்ந்த ஜயதிஸ்ஸ தலைமையில் விசேட நடைபவணி ஒன்று இடம்பெற்றிருந்தது. கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பித்த பேரணி, விஹாரமஹா தேவி பூங்காவின் ஊடாக சுதந்திர சதுக்கத்தைச் சென்றடைந்திருந்தது.

முன்கூட்டியே தடுக்கக் கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்களை தெளிவூட்டல்,  அவர்களின் ஆதரவுடன் அனர்த்தங்களை குறைத்தல் மற்றும் விபத்துகளின் போது சிகிச்சை அளிக்கும் சகல சுகாதார ஊழியர்களின் அர்பணிப்பை பாராட்டுவதை நோக்கமாக கொண்டு  தேசிய பேரிடர் செயலகத்தால் இந்த  நடைபவணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, விபத்துகளால் ஒவ்வொரு நாளும் 6 பேர் உயிரிழப்பதுடன், ஏராளமானோர் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அங்கவீனர்களாகுவதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள பொதுமக்களில் அதிகளவானோர் விபத்துகளுக்கு ஆளாகிய  சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு ஏற்படக்கூடிய அனர்த்தங்களில் பெருமளவானவை எம்மால் முன்கூட்டியே தடுத்துக் கொள்ளக் கூடியவையாகும். அத்தோடு அனர்த்தங்களை கட்டுப்படுத்துவது  அல்லது குறைத்துக் கொள்வது சுகாதார துறைக்கு மாத்திரமல்லாது நாட்டின் பொருளாதாரத்துக்கும் வலுசேர்க்கும் விடமாகும்.

அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்களை தெளிவூட்டுவதற்காகவும் விபத்துகளுக்கு ஆளாகும் ஒவ்வொருவருக்கும் சிகிச்சை அளிக்கும் விசேட நிபுணர்கள் முதல் அனைத்து சுகாதார ஊழியர்களினதும் அர்ப்பணிப்பை கௌரவிப்பதற்காகவும் இன்றைய தினம் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னேறும்போது, விபத்துக்களைத் தடுப்பதற்கான தலையீடுகள் அனைத்து துறைகள் மற்றும் அம்சங்களிலிருந்தும் வழங்கப்பட வேண்டும்

எதிர்பாராத அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்களை தெளிவூட்டி,  அவ்வாறு ஏற்படக்கூடிய அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதுடன்  அதன்மூலம் வைத்தியசாலைக்கு ஏற்படும் அழுத்தங்களை குறைக்க முடியும் என்றார்.