தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை (10) 7.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் உயரமான பகுதிகளுக்கு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
மிண்டானாவோ (Mindanao) பிராந்தியத்தின் டவோ ஒரியண்டலில் உள்ள மனாய் நகரத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
10 கிலோமீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் பின்அதிர்வுகள் குறித்து பிவோல்க்ஸ்Phivolcs நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மற்றும் தென் பிலிப்பைன்ஸில் உள்ள கடலோர நகரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும் அல்லது நாட்டின் உட்பிரதேசங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் குறித்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை.
அடுத்த இரண்டு மணித்தியாலங்களில் சாதாரண கடல் அலைகளை விட ஒரு மீற்றருக்கும் அதிகமான அலை உயரத்தை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் நிறுவனம் 7.4 ரிச்டர் அளவில், 58 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.

