2025 ஆம் ஆண்டின் முதல் 08 மாதங்களில் கைக்குழந்தைகளுடன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை 38 ஆகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் பிரதமரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட பெண்களுடன் 38 கைக்குழந்தைகள் சிறையில் இருப்பதாகக் கூறினார்.
அதில் 15 ஆண் குழந்தைகளும், 23 பேர் பெண் குழந்தைகளும் அடங்குவதாக அவர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், தாய்மார்களுடன் சிறைச்சாலையில் உள்ள 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் பராமரிப்பதற்காக சிறைச்சாலை பெண்கள் பிரிவுகளில் குழந்தை பராமரிப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்தக் குழந்தை பராமரிப்பு மையங்கள் ஏனைய கைதிகளிடமிருந்து தனித்தனியாக அமைந்துள்ளதாகவும், அங்கு குழந்தைகள் தங்கள் தாய்மார்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், கைதிகளுக்கு வழங்கப்படும் தினசரி உணவுப் பங்கீட்டுடன், குழந்தைகளுக்கு பால்மா மற்றும் தினசரி உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், சிறையில் தாய்மார்களுடன் உள்ள குழந்தைகளின் கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் விதம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், தனியார் நிறுவனத்தின் வளங்களைக் கொண்டு சுமார் 10 ஆண்டுகளாக முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையம் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
இதற்கிடையில், 2025 ஜனவரி 01 முதல் ஓகஸ்ட் 31,வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளின் எண்ணிக்கை 425 ஆகும் பிரதமர் கூறினார்.

