இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகளை கையாள்வதில் முன்னேற்றம் ஏற்படாமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் தொடர்பான குழு (UNCED) கவலை தெரிவித்துள்ளது.
இலங்கையின் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் (OMP) செயல்திறன் குறித்தும் அந்த குழு அதிருப்தி வௌியிட்டுள்ளது.
அந்த குழு சுமார் 17,000 வழக்குகளில் சிலவற்றை மட்டுமே கண்டறிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் தொடர்பான குழு நேற்று (07) வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குற்றச்சாட்டின் விசாரணை மற்றும் வழக்குத் தொடுப்பதில் முன்னேற்றம் இல்லாமையினால் அதிக அளவிலான தண்டனை விலக்கு அளிக்கப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழு குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்கழுவில் (UNHRC) இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் (OHCHR) அலுவலகத்தின் அதிகாரத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் தீர்மானம் நிறைவேற்றியதன் பின்னர் இந்த அறிக்கை வௌிவந்துள்ளது.
இலங்கையின் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் பெற்ற 16,966 வழக்குகளில், இதுவரை 23 வழக்குகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும், காணாமல் போனோரின் குடும்பங்களின் நீண்டகால கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்காக நிறுவப்பட்ட நிறுவனத்தின் செயல்திறன் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
காணாமல் போனவர்களின் அனைத்து வழக்குகளின் விரிவான மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிவேட்டை ஒருங்கிணைக்கவும், காணாமல் போனவர்களை தீவிரமாக தேடவும், பொறுப்பானவர்களை விசாரித்து வழக்குத் தொடரவும், பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் இலங்கையின் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை ஐக்கிய நாடுகளுக்கான குழு வலியுறுத்தியது.
நாடு முழுவதும் குறைந்தது 17 மனித புதைகுழிகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறித்தும் அந்த குழு கவலை தெரிவித்துள்ளது.
இலங்கை அதிகாரிகளின் வரையறுக்கப்பட்ட தடயவியல் திறன் மற்றும் தேசிய மரபணு தரவுத்தளம் உட்பட மையப்படுத்தப்பட்ட முன்-மருத்துவம் மற்றும் பிரேத பரிசோதனை தரவுத்தளங்கள் இல்லாததை UNCED விமர்சித்துள்ளது.
மனித புதைகுழிகளைத் தேடுதல், அடையாளம் காணுதல், அகழ்வாராய்ச்சி மற்றும் விசாரணை செய்வதற்கான விரிவான உத்தியை உருவாக்கவும் அதனுடன் தொடர்புடைய தேசிய நிறுவனங்களின் திறனை வலுப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை அது வலியுறுத்தியது.

