அரச வைத்தியசாலைகளில் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஃபிஸ்டுலா ஊசிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. அனைத்து வைத்தியசாலைகளிலும் நோயாளர்களுக்கு அவசியமான ஊசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் பிரதி அமைச்சரை் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் செவ்வாய்கிழமை (7) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்,
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஃபிஸ்டுலா ஊசிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இவ்வாறான ஊசிகளைப் பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஊசிகள் ஒரு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. கடந்த வாரங்களில் விநியோக செயன்முறையிலும் சிக்கல் நிலவியது எனினும் நாம் அவற்றை மீள வழமைக்கு கொண்டுவந்துள்ளோம்.
தற்போது வைத்தியசாலைக்கு வருகைத்தரும் அனைத்து சிறுநீரக நோயாளிகளுக்கும் தேவையான அளவில் ஊசிகள் கையிருப்பில் உள்ளன. அரச வைத்தியசாலைகளில் இவ்வகையான ஊசிகளுக்கு தட்டுபாடு நிலவுவதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. தனியார் மருந்தகங்களில் கடந்த ஒரு சில நாட்களில் கையிருப்பில் இருந்த ஊசிகள் வாடிக்கையாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதனால் தனியார் மருந்தகங்களில் கையிருப்பில் இருந்த ஊசிகள் தீர்ந்துள்ளன.
இந்நிலையில் அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஒரு சிலர் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இன்று பாராளுமன்றத்திலும் இது குறித்து பேசப்பட்டது. அவ்வகையான ஊசிகள் இரத்த சுத்திகரிப்புக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பில் வீண் அச்சம் கொள்ள தேவையில்லை. ஏனைய வகை ஊசிகள் சகல வைத்தியசாலைகளிலும் போதியளவில் உள்ளன என்றார்.

