முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை செப்டம்பர் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷ இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சஷீந்திர ராஜபக்ஷவின் பிணை மனுவை கொழும்பு பிரதான நீதவான் நிராகரித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது தீக்கிரையாக்கப்பட்ட செவனகல – கிரிப்பன் வேவ பகுதியில் உள்ள அரசாங்க நிலத்திற்கு மற்றொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ நுகேகொடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் ஆகஸ்ட் 06 ஆம் திகதி காலை கைதுசெய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

