உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பராமரிப்புக்கான அணுகலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைய, கொழும்பில் ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ (Médecins Sans Frontières/MSF) அமைப்பின் ஆசிய விஞ்ஞான நாட்கள் 2025 (MSF Scientific Days Asia 2025) மாநாடு வெள்ளிக்கிழமை ( செப்டெம்பர் 19) நடைபெற்றது.
சுகாதாரப் பாதுகாப்பில் சமூகங்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்த இம்மாநாட்டில், 150க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், சமூகத் தலைவர்கள், மற்றும் நோயிலிருந்து குணமடைந்த சிலர் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் “சுகாதாரத்தைப் புதுப்பித்தல்: கேட்டல், கற்றல், வழிநடத்துதல் – சுகாதாரப் பாதுகாப்பில் சமூகத்தின் குரல்” என்பதாகும்.
இந்த மாநாட்டில் ஐந்து முக்கிய பிரிவுகளின் கீழ் விவாதங்கள் இடம்பெற்றன. கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டுவருதல், ஆராய்ச்சி மற்றும் புதுமை, திறன் மேம்பாடு, சமூகம் மற்றும் நோயாளி வலையமைப்புகளை மேம்படுத்துதல், மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்த விவாதங்கள் இடம்பெற்றன.
“சமூகம் பயனாளிகள் அல்ல, பங்காளர்கள்” என்ற தலைப்பில், *எம்.எஸ்.எஃப் தெற்காசியாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பார்த்தசாரதி ராஜேந்திரன் தனது தொடக்க உரையில், விஞ்ஞான நாட்கள் மாநாடு வெறும் ஆராய்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளும் இடமாக இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
நெருக்கடியான சூழ்நிலைகளில் சுகாதாரப் பாதுகாப்பு குறித்த முடிவுகள் அதிகாரத்தின் அடிப்படையில் எடுக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமூகங்கள், நோயாளிகள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் பயனாளிகள் அல்ல, மாறாக அவர்கள் முக்கியமான அறிவைக் கொண்டுள்ள சம பங்காளர்கள்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“ஆராய்ச்சி மக்கள் வாழ்க்கையைத் தொட வேண்டும்” என்ற தலைப்பில், கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் வஜிர திஸ்ஸநாயக்க உரையாற்றுகையில்,
ஆராய்ச்சிகள் வெறும் கல்வி வட்டங்களுக்குள் முடங்கிவிடக்கூடாது என்று கூறினார். “அறிவு என்பது ஆய்விதழ்களிலோ அல்லது மாநாட்டு மண்டபங்களிலோ அடைத்து வைக்கப்படுவதற்கல்ல. அது கொள்கைகளாகவும், நடைமுறைகளாகவும் மாறி மக்களின், குறிப்பாக விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைத் தொட வேண்டும். சரியான நடைமுறைப்படுத்தல் இல்லாத ஆராய்ச்சி, நீதிக்கான ஒரு இழந்த வாய்ப்பாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.
“சுகாதாரத்தில் சமூகத் தலைமைத்துவம் அவசியம்” என்ற தலைப்பில் சர்வதேச சர்வோதயா இயக்கத்தின் தலைவர் கலாநிதி வினியா ஆரியரத்ன உரையாற்றுகையில்,
சுகாதாரப் பாதுகாப்பின் பின்னணியில் உள்ள சமூகத் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சமூகத் தலைமைத்துவம் இல்லாமல் சுகாதாரப் பாதுகாப்பு ஒருபோதும் நிலைத்திருக்காது. இந்த மாநாடு, அடிமட்ட நிலை மக்களின் யதார்த்தங்கள், கல்வி சார்ந்த ஆதாரங்கள் மற்றும் கொள்கைகளை ஒருங்கே இணைக்கும் ஒரு தளமாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
“மனிதாபிமான அமைப்புகளில் உள்ள முரண்பாடுகள்” என்ற தலைப்பில், இந்தியாவின் கல்கத்தா இந்திய மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் தேவி விஜய் உரையாற்றுகையில்,
மனிதாபிமான மற்றும் சுகாதார அமைப்புகளில் உள்ள ஒழுக்கரீதியான முரண்பாடுகளை விமர்சித்தார். நமது அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகள் சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் ரீதியான புறக்கணிப்பை உருவாக்கியுள்ளன. இந்த நிலையில், மனிதாபிமானப் பணியானது ஒரு தீவிரமான செயல்பாடாக எவ்வாறு மாற்றப்பட வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) அமைப்பானது, ஒரு சர்வதேச, சுதந்திரமான மருத்துவ மனிதாபிமான அமைப்பாகும். இந்த அமைப்பு 70க்கும் மேற்பட்ட நாடுகளில், மோதல்கள், தொற்றுநோய்கள், இயற்கை பேரழிவுகள் அல்லது சுகாதார சேவைகளிலிருந்து ஒதுக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குகிறது. 69,000க்கும் மேற்பட்ட சுகாதார நிபுணர்கள், தளவாட மற்றும் நிர்வாகப் பணியாளர்களைக் கொண்ட குழுக்களைக் கொண்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர் அளவில் பணியமர்த்தப்படுகிறார்கள். அமைப்பின் செயல்பாடுகள் மருத்துவ அறநெறி மற்றும் நடுநிலைமை, சுதந்திரம், பாரபட்சமற்ற தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய கொள்கைகளால் வழிநடத்தப்படுகின்றன.
இந்த மாநாடு, சுகாதாரப் பாதுகாப்பில் சமூகம் மற்றும் தனிநபர்களின் குரல்களுக்கு முக்கியத்துவம் அளித்தது. இது, சுகாதாரப் பாதுகாப்பு ஒரு சலுகை அல்ல, அது ஒரு உலகளாவிய உரிமை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது.

