ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு மதிப்பளித்து ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அதில் பங்கேற்பார். இனிவரும் காலங்களில் இவ்விரு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் ஸ்திரமாகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நான் அரசியலுக்கு வர முன்னர் கோடிகளில் காணப்பட்ட வருமானம், அரசியலுக்குள் பிரவேசித்த பின்னர் வங்கிக் கடனில் செல்கிறது. ஆனால் ஆளுந்தரப்பினருக்கு உண்ண உணவும் உடுத்த ஆடையும் இன்றி இருந்த காலம் மாறி தற்போது அவர்கள் தனவந்தர்களாகவுள்ளனர். இது இன்று சமூகத்தில் பாரிய கேள்வியாகவுள்ளது. நாமும் எமது சொத்து பிரகடனத்தை வழங்கியிருக்கின்றோம்.
சொத்து பிரகடனம் வெளியிடப்பட்ட பின்னர் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களுக்கு அப்பால் ஜே.வி.பி. கடந்த காலங்களில் எந்தளவுக்கு பொய் கூறி மக்களை ஏமாற்றியிருக்கிறது என்பது தற்போது தெளிவாகியிருக்கிறது. 2020இல் கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஏமாற்றமடைந்த மக்கள் தற்போது அநுரகுமார திஸாநாயக்கவிடம் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆனாலும் மக்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள்.
2004ஆம் ஆண்டிலிருந்து மக்கள் தவறான தீர்மானங்களையே எடுத்திருக்கின்றனர். இதற்கு முன்னரும் நாம் சொத்து விபரங்களை வெளியிட்டிருக்கின்றோம். ஆனால் அது இந்தளவுக்கு பேசப்படவில்லை. ஜே.வி.பி.யினர் கடந்த காலங்களில் கூறிய பொய்கள், தான் இந்த விடயத்தை இந்தளவுக்கு பேசுபொருளாக்கியிருக்கின்றன. சொத்து விபரங்களை சமர்ப்பித்தால் மாத்திரம் போதாது. அவற்றின் மூலங்களையும் எதிர்க்கட்சிகள் வெளியிட வேண்டும்.
ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அதில் பங்கேற்ற தீர்மானித்துள்ளார். கட்சி உறுப்புரிமைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
நாம் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளோம். ஒரே சந்தர்ப்பத்தில் இருவேறு கட்சிகளின் அங்கத்துவம் வகிக்க முடியாது. எவ்வாறிருப்பினும் இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்திரமாகவுள்ளோம்.
இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடையும் என்று நம்புகின்றோம். இது ஓரிரு நாட்களில் நிறைவடையும் விடயமல்ல. இனிவரும் தேர்தல்களில் எவ்வாறு களமிறங்குவது என்பது குறித்து தேர்தல் காலத்தில் தீர்மானிக்கப்படும். அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை அறிவிக்கும் வரை காத்திருக்கின்றோம் என்றார்.

