மின்சார சபையை நான்கு பங்குகளாக பிரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (18) இலங்கை மின்சார சபை பிரதான காரியாலயத்துக்கு முன்பாக கொட்டும் மழையிலும் மின்சார சபை தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளன.
வீதியை மறித்து நூற்றுக்கணக்கான மின்சார சபை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காலி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
மின்சார சபையை நான்கு பங்குகளாக பிரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சபை தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் இரண்டாவது நாளாக இடம்பெற்றது.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை கிளைகளில் நிலவிய ஊழியர் பற்றாக்குறையால் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மாத்திரமே பயனர்களுக்கு வழங்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அத்தோடு மின்சார சபை ஊழியர்களின் வரப்பிரசாதங்களை குறைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு தெரிவித்து இன்றைய தினமும் மின்சார சபை ஊழியர்கள் கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபை பிரதான காரியாலயத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்சார சபை ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சலுகை மற்றும் கொடுப்பனவை மீள வழங்குமாறு இலங்கை மின்சார சபை அனைத்து தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தனர்.
காலை 11.30 மணியளவில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் மின்சார சபைக்கு முன்பாக கூடியிருந்ததுடன், பாதையின் இருமறுங்கிலும் போராட்டக்காரர்கள் குவிந்தும் வீதியை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன் சில மணிநேரத்துக்கு போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், போக்குவரத்தை சீர் செய்வதற்காகவும் பெருமளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் போராட்டக்களத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
இதேவேளை மின்சார சபை தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபை சுதந்திர ஊழியர் சங்க செயலாளர் பிரபாத் பிரியந்த குறிப்பிடுகையில்,
எமது தொழிற்சங்க நடவடிக்கையின் பிரகாரம் இன்றும் 10 ஆயிரத்துக்கும் அதிகளவான மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றும் இன்றும் மழையில் நனைந்தபடி போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம். மின் பயனர்களை அசௌகரியத்துக்கு ஆளாக்காது பேச்சிவார்த்தையினூடாக இதற்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம். ஜனாதிபதி நேற்று நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மின்சார ஊழியர்களை கண்டித்திருந்தார்.
இந்த பிரச்சினையை முறையாக புரிந்துகொள்ளாமல் அரசாங்கத்தினர் வேறு கோணத்தில் அணுகுகின்றனர். எவ்வாறெனினும் எமது கோரிக்கைகளுக்கு உரிய தரப்பினர் கவனத்தில் கொள்ளாத பட்சத்தில் 21ஆம் திகதிக்குப் பின்னர் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.




