எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் வீடுகளுக்கு அத்துமீறிய வகையில் நுழையும் பொலிஸார் அங்கு போதைப்பொருட்களை இரகசியமான முறையில் வைத்து விட்டு பின்னர் கைது செய்கிறார்கள். பொலிஸாரின் செயற்பாடுகள் முறையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிராகவே அரசாங்கம் செயற்படுகிறது. எதிர்;க்கட்சியின் உறுப்பினர்கள் திட்டமிட்ட வகையில்
அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். அரசாங்கம் தனது அரசியல் செயற்பாடுகளுக்கு பொலிஸாரையும் பயன்படுத்திக் கொள்கிறது.
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் வீடுகளுக்கு அத்துமீறிய வகையில் பொலிஸார் நுழைகிறார்கள். நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் பொலிஸார் வீடுகளை பரிசோதிக்கிறார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எல்பிட்டிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீடு கடந்த வாரம் பொலிஸாரால் அத்துமீறிய வகையில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் வீடுகளுக்கு அத்துமீறிய வகையில் நுழையும் பொலிஸார் அங்கு போதைப்பொருட்களை இரகசியமான முறையில் வைத்து விட்டு பின்னர் கைது செய்கிறார்கள். பொலிஸாரின் செயற்பாடுகள் முறையற்றது.
பொலிஸ்மா அதிபர் இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது.நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

