நேபாளம், இந்தோனேசியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் உருவான மக்கள் எழுச்சிகள் வழக்கத்துக்கு மாறானவை அல்ல. மாறாக அவை சமத்துவமின்மை மேலோங்குகையில் ஏற்படக்கூடிய விளைவினைக் காண்பிக்கும் எச்சரிக்கைகள் ஆகும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற ‘அரகலய’ மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பின்னர் பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியாவிலும், அண்மையில் நேபாளத்திலும் உருவான மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் தொடர்பில் இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய ஊடகமொன்றுக்கு எழுதியிருக்கும் கட்டுரையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மனோகணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
‘நேபாளம், இந்தோனேசியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் உருவான மக்கள் எழுச்சிகள் வழக்கத்துக்கு மாறானவை அல்ல. மாறாக அவை எச்சரிக்கைகளாகும்’ என அப்பதிவில் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு சமத்துவமின்மை மேலோங்கி, வாய்ப்புக்கள் பறிக்கப்பட்டு, நம்பிக்கை பறிபோகும் வேளையில் என்ன நடக்கும் என்பதை அந்த எழுச்சிகள் காண்பிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இருப்பினும் அவை தீர்வுக்கான புள்ளியாகத் திகழ்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

