முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தரவுகள் உண்மைக்கு புறம்பானவை !

46 0

முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் தனக்காக 2024ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளதாக அண்மையில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் உண்மைக்கு புறம்பானதாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நான் செல்லவுள்ள வீட்டின் நிர்மானப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை நிறைவடைந்த பின்னர் வெகு விரைவில் இந்த வீட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வேன் எனத் தெரிவித்த அவர், பொலன்னறுவைக்கு செல்ல விரும்பினாலும் கொழும்பில் தங்கியிருக்க வேண்டியேற்பட்டுள்ளது. ஜனாதிபதியாக பதவி வகித்த போது பொலன்னறுவையிலிருந்தே ஆட்சி செய்யதாகவும் குறிப்பிட்டார்.

இந்த வீட்டிலிருந்து செல்வதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகளைத் தவிர மேலும் பல அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகள் இந்த அரசாங்கத்தால் மீளப் பெறப்பட்டாலும், அவை பயன்பாடின்றி கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. தற்போது அவற்றில் குரங்குகள் தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் தொடர்பில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளை நான் சிறிதளவேனும் கவனத்தில் கொள்ளவில்லை. அவை முற்று முழுதாக போலியான தரவுகளாகும் என்றும், பாதுகாப்பு செலவுகளைக் கூட அவர்கள் எமது செலவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டார். உலகின் ஏனைய நாடுகளில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வாறான பாதுகாப்புக்களும் கௌரவமும் வழங்கப்படுகிறது என்பதை அரசாங்கத்தினர் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனது ஆட்சி காலத்தில் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட முக்கிய பாதாள உலகக் குழுவினரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றேன். நான் தற்போது ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்கின்றேன். எனக்கு வேறு எந்த வருமான மூலமும் இல்லை. நான் உயிர் வாழும் வரை சுதந்திர கட்சி அங்கத்தவனாகவே இருப்பேன். அரசியலில் இருந்தாலும் இனி செயற்பாட்டு அரசியலில் ஈடுபட மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.