இருப்பினும் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது தொடர்பில் தீர்மானிக்க எல்லை நிர்ணயக்குழுவிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதுடன் இந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தேர்தல் முறைமை குறித்து அனைத்து கட்சிகளினதும் ஏகோபித்த இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் 4 கட்டங்களாக மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடாத்தப்பட்டிருந்தன.
இதன் பிரகாரம் 2012 செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கும், 2013 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி மத்திய, வடமேல் மற்றும் வடமாகாண சபைகளுக்காகவும், இறுதியாக 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி ஊவா மாகாண சபைக்காகவும் தேர்தல்கள் நடாத்தப்பட்டன.
இவ்வாறானதொரு நிலையில், மாகாண சபைத் தேர்தலுக்கான புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்துவதற்காக, எல்லை நிர்ணயம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு குழு நியமிக்கப்பட்டது.
இந்தக் குழு 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டது.
இதன் நோக்கம், மாகாண சபைத் தேர்தல்களை புதிய கலப்பு தேர்தல் முறைமைக்கு ஏற்ற வகையில் எல்லைகளை மறுசீரமைப்பதாகும்.
இக்குழுவில் ஐந்து உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில், மஹிந்த தேசப்பிரிய (அப்போதைய தேர்தல் ஆணையாளர்) இதன் தலைவராகப் பணியாற்றினார்.
இக்குழு தனது அறிக்கையை 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சமர்ப்பித்தது. அறிக்கையில், புதிய தேர்தல் முறையான விகிதாசார மற்றும் வட்டார முறைமைகளை இணைத்து, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான எல்லை நிர்ணயங்கள் பற்றிய விரிவான பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.
இருப்பினும் இக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, அதற்கு ஆதரவாகப் போதியளவு வாக்குகள் கிடைக்கவில்லை.
புதிய தேர்தல் முறையை அமுல்படுத்துவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல், அறிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுவது இன்றளவில் தாமதமாகியுள்ளது.
தற்போது, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து பல சர்ச்சைகளும், சட்டரீதியான சிக்கல்களும் நிலவி வருகின்றன. தேர்தல் முறைமை பற்றிய சட்டங்கள் முறையாக அமுலுக்கு வராததால், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ளன.
இத்தகைய சூழலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை அடுத்த ஆண்டில் நடத்துவது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
புதிய முறைமையில் மாகாணச் சபை தேர்தலை நடத்துவதா ? அல்லது பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்துவதா? என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏகோபித்த இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்ளும் வகையில், எல்லை நிர்ணயக்குழுவிடமிருந்து அறிக்கையை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

