பலஸ்தீன் குறித்த ஐ.நா. தீர்மானத்துக்கு இலங்கை வரவேற்பு

55 0

பலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வைக் காண்பதற்கும், இரு நாடுகள் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆதரவாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முக்கியமான முன்முயற்சியை முன்னெடுத்தமைக்காக சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள், அத்துடன் தொடர்புடைய ஐ.நா. தீர்மானங்களுக்கு இணங்க, பாலஸ்தீன மக்களுக்கு அரசுரிமைக்கான மறுக்க முடியாத உரிமைக்கு இலங்கை தனது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

உலகத் தலைவர்களின் சந்திப்புக்கு முன்னதாக, இஸ்ரேலுக்கும் பலஸ்தீனியர்களுக்கும் இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கான ‘உறுதியான, காலவரையறையுடன் கூடிய மற்றும் மீளமுடியாத நடவடிக்கைகளை’ கோடிட்டுக் காட்டும் பிரகடனத்திற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வெள்ளிக்கிழமை பெரும்பான்மை வாக்குகளால் ஒப்புதல் அளித்தது.

ஏழு பக்கங்கள் கொண்ட இந்த பிரகடனம், பல தசாப்தங்களாக நீடித்து வரும் இந்த மோதல் குறித்து ஜூலை மாதம் ஐ.நா.வில் சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ் நடத்திய சர்வதேச மாநாட்டின் விளைவாகும்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த நிகழ்வைப் புறக்கணித்தன. இந்த பிரகடனத்தை அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக 142 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவானது, அதேவேளை 12 நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.